சம்பளம் தராமல் இழுத்தடித்த யஜமானர்: சமையல்காரரின் துணிகர செயல்

தமிழகத்தின் சென்னையில் சம்பளத்தை தராமல் இழுத்தடித்ததால் 13 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த சமையல்காரரை திரைப்பட பாணியில் பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவர் சொந்தமாக நகைக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 6 ஆம் திகதி லொக்கரில் நகைகள் மற்றும் பணத்தை வைத்துவிட்டு பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் அடுத்த நாள் பார்க்கும்போது லொக்கர் திறக்கப்பட்டு 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி, 40,000 ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த சந்தோஷ்குமார் இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த பொலிசார் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அதில் இரண்டுபேர் மீது சந்தேகம் தெரிவித்த பொலிசாருக்கு, ஒருவர் சந்தோஷ் குமார் வீட்டின் சமையல்காரர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை தேடிய பொலிசாருக்கு அவர் சென்னையில் இருந்து மாயமானது தெரியவந்தது. மேலும் அவர் ஆந்திரா மாநிலம் நோக்கி செல்வதாகவும் தகவல் கிடைத்து.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், சிங்கம் படபாணியில் ரயில்வே பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து களத்தில் இறங்கிய ரயில்வே பொலிசார், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் மூட்டை முடிச்சுகளுடன் கொள்ளையர்கள் அமர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர்.

அவர்களை கைது செய்த ரயில்வே பொலிசார், பின்னர் சென்னை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இந்தக் கொள்ளை சம்பவத்தில் சமையல்காரர் ஹன்ஸ்ராஜ், அவரின் சகோதரர் ஹிரேந்திர சிங் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சந்தோஷ் குமாரிடம் தாம் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், ஆனால் சம்பளத்தை சரிவர தரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனாலையே தாம் லொக்கர் சாவியை எடுத்து தங்கம், வெள்ளி ஆகியவற்றை கொள்ளையிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.