தமிழ் இளைஞருக்கு விமான நிலையத்தில் நேர்ந்த கதி! கொதித்தெழுந்த உலகத்தமிழர்கள்!

தமிழ்நாட்டு இளைஞர் ஒருவருக்கு இந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி அவரை அவமானப்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆபிரஹாம் சாமுவேல் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா செல்ல மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது நடந்த இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக ட்வீட் செய்தார்.

அதில், தமிழும் ஆங்கிலமும் மட்டும் தான் எனக்குத் தெரிந்திருந்தது. அதனால், மும்பை சத்ரபதி விமானநிலையத்தில், உனக்கு இந்தி தெரியாதா அப்படியென்றால் தமிழ்நாட்டுக்குப் போ என்று குடியுரிமை அதிகாரி ஒருவர் அவமானப்படுத்தினார் என பதிவிட்டார்.

மேலும், தன் பதிவை பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு டேக் செய்திருந்தார்.

ஆபிரஹாமின் பதிவு வைரலான நிலையில் அவரை அவமானப்படுத்திய அதிகாரி பணியிலிருந்து அகற்றப்பட்டார்.

அடுத்த 4 நிமிடத்தில் அவருக்குக் குடியுரிமை சான்று வழங்கப்பட்டது. ஆபிரஹாம் அமெரிக்காவில் உள்ள க்ளாக்ஸ்டன் பல்கலையில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். இந்த விவகாரம் தொடர்பாக அவர் பல ட்வீட்களை வெளியிட்டார்.

ஒரு ட்வீட்டில், இந்தி தெரியவில்லை என்பதற்காக மட்டும் அந்த அதிகாரி என்னை அவமதிக்கவில்லை. மேலும், தமிழ்க் குடியுரிமை கவுன்டரைக் கண்டுபிடித்துச் செல்லும்படியும் கூறினார் என்று கூறியிருந்தார்.

அந்தக் குடியுரிமை அதிகாரிக்கு நன்றாக ஆங்கிலம் தெரிந்திருந்தது. என் கண் முன்பே வெளிநாட்டு பிரஜையிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசியதைக் கண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.