விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களுக்கு 185 வருட கடூழிய சிறைத்தண்டனை!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையின் 37 பேரை ஏவுகணை செலுத்தி கொலை செய்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மகேஷ் வீரமன் முன்னிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோதே பிரதிவாதிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம் ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

185 வருட கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 வருடங்கள் கழிக்கும் வகையில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தி தாக்கியதுடன், அதில் பயணித்த பாதுகாப்பு படையின் 37 பேர் கொல்லப்பட்டனர்.

இவை உள்ளிட்ட 37 குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.