இலங்கையில் ஹீரோவாக செயற்பட்ட தந்தை! அரசாங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி

கண்டி – யட்டிநுவர வீதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிர்தப்பிய குடும்பத்திற்கு வீடொன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்தக் குடும்பத்தவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறி கண்டி கெப்பெட்டிபொல ஓய்வு மண்டபத்தில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரைக்கு அமைய நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை அவர்களுக்கு புதிய வீடொன்றை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் ஷான் கஹவெல அந்த குடும்ப உறுப்பினர்களை சந்தித்து தகவல்களைப் பெற்றுக் கொண்டார்.

கண்டி, யட்டிநுவர வீதியில் 5 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தனது குடும்பத்தையே காப்பாற்றிய வீர தந்தையான ராமராஜ் கண்ணீருடன் கருத்து வெளியிட்டிருந்தார்.

தீயில் எரிந்து உயிரை விடுவதை விட பிள்ளைகளின் உயிரை காப்பாற்றுவதே நோக்கமாக இருந்ததாகவும், அதனாலேயே பிள்ளைகளை மேல் இருந்து கீழே தூக்கி வீசியதாகவும் அவர் தெரிவித்தார்.

தான் வாழ்ந்த இடம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. வாழ ஒரு இடமில்லை. குடும்பத்தோடு நடு வீதிக்கு வந்துவிட்டோம்.

வைத்தியசாலையில் இருந்து எங்கு செல்லப்போகிறோம் என தெரியவில்லை. வாழ இடமில்லை. பிள்ளைகளுக்கு ஒரு பாடசாலை இல்லை என ராமராஜ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நெருக்கடியான நிலையில் அந்த குடும்பத்திற்கு வீடொன்றை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.