புலிகளின் முன்னாள் முக்கிஸ்தர்களுக்கு கடூழிய சிறைத் தண்டனை

அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் விமான நிலையத்தை தாக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 விமானங்களை தாக்கியழித்து 400 கோடி ரூபாயுக்கும் மேல் சேதத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு பேருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த இரண்டு பேருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஷ் வீரமன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த தண்டனை 5 ஆண்டுகளில் கழிந்து போகும் வகையில் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அனுராதபுரம் விமானப்படை முகாம் மற்றும் விமான நிலையம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர்கள் இருவரும், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரிடம் வழங்கிய வாக்குமூலங்கள் சட்டரீதியானவை என நீதிபதி இதற்கு முன்னர் தீர்மானித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் நடத்திய ஒபரேஷன் எல்லாளன் என்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 14 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர். அத்துடன் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 21 தற்கொலை போராளிகள் கொல்லப்பட்டனர்.