உத்தரதேவி தொடருந்தில் நடக்கும் சீர்கேடுகள்!

கொழும்பு – யாழ்ப்பாணம் – காங்கேசந்துறைவரை சேவையில் ஈடுபடும் உத்தரதேவி தொடருந்து குறித்து மக்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த தொடருந்து இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலையில் இதன் சேவை அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே மக்கள் விசனங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக மூன்றாம் ஆசனங்களை கொண்ட பெட்டியில் முற்பதிவு பகுதியும், முற்பதிவற்ற சாதாரண டிக்கற் பகுதியும் ஒரே நேருக்கு தடுப்புக்கள் இல்லாமல் அமைந்து.

இதனால் இதில் பயணித்து வரும் மக்கள் பலவித அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தால் அசௌகரியத்திற்கு உள்ளான யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பயணி ஒருவர் தெரிவிக்கையில்,

எதிர்பார்ப்புடன் இந்த புதிய தொடருந்தில் ஏறிய போதும் எதிர்பார்த்ததை விட மிக மோசமான ஒரு பயணத்தை உணர்ந்தேன்.

நாம் பதிவு செய்த மூன்றாம் வகுப்பு பெட்டியில் சாதாரண டிக்கெட்டில் பயணிப்போரும் ஏறி மிகவும் நெருக்கியபடி பயணித்துள்ளனர்.

அதில் சில இளைஞர்கள் பெண்கள் மீது அங்க சேட்டைகளில் ஈடுபட்டதனையும் அவதானித்தேன். பதிவு செய்த ஆசனத்தில் கூட நிம்மதியான பயணம் இல்லை. ஏறும்போதும் தள்ளி விழுத்தியபடி ஏறுகிறார்கள்.

முற்பதிவுக்கென ஒதுக்கிய ஆசனத்தில் ஏன் தேவைக்கதிகமானோரை ஏற்றுகிறீர்கள் என அதிகாரிகளிடம் கேட்டதற்கும் உரிய பதில் இல்லை.

மிகவும் வெறுப்பான ஒரு பயணம். பேசாமல் பேருந்தில் வந்திருக்கலாமோ என்று தோன்றியது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொடருந்தில் பயணிக்கும் சிலர் வெற்றிலை சாப்பிட்டு தொடருந்திலேயே துப்பிவிடுவதாகவும் சமூக வலைத்தளங்களில் படம் ஒன்று வெளியிட்டு விசனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகதாகும்.