மைத்திரி – ரணில் இடையில் மீண்டும் பெரிய மோதல் வெடிக்கும் ஆபத்து?

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை தேசிய அரசாங்கமாக மாற்றும் யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தயாராகி வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான நிலவி வரும் பகையானது அரசியல் நெருக்கடியாக மாறும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணியின் இந்த முயற்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு கடும் எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளது.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

இதனால், ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை தோற்கடிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவை மைத்திரி – மகிந்த தரப்பு பெற்றாக வேண்டும்.

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி ஒன்று நாடாளுமன்றத்தில் இருப்பதால், யோசனையை தோற்கடிப்பதும் சிரமானது எனக் கூறப்படுகிறது.

இதனால், ஐக்கிய தேசிய முன்னணி கொண்டு வந்துள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனையை மைத்திரி – மகிந்த தரப்பினரால் தோற்டிக்க முடியாது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எப்படியான யோசனை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பது தொடர்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக பேசப்படுகிறது.

யோசனை நிறைவேற்றப்பட்டால், அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தவிர்க்க முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார்.

இதனை தவிர ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், தேசிய அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள யோசனைக்கு எதிரான முனைப்புகளை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யோசனை தொடர்பான விவாதம் நடக்கும் போது நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்த தயாராகி வருவதாகவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அத்துடன் தேசிய அரசாங்கம் தொடர்பான எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ள ஜனாதிபதியின் தரப்பினர் தமக்கு ஆதரவான ஊடகங்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சில ஊடகங்கள் தேசிய அரசாங்கத்திற்கு எதிரான சிறப்பு செய்திகளை வெளியிட தயாராகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.