நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் துரைமுருகன் ; விளக்கம் கேட்கும் கட்சியினர்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடைகளில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் போலவே உரத்த குரலில், எள்ளல் தொனியில் பேசி இளையோர்களின் கவனத்தை ஈர்த்தவர் துரைமுருகன்.

இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்ததுடன், சமூக வலைத்தளமான யூட்யூப்பில் தனியானதோர் பக்கத்தினை துவக்கி கட்சியின் கொள்கைகளை, பிற கட்சிகள் மீதான விமர்சனங்களை காணொளிகளாக வெளியிட்டும் வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக கோவையில் நடைபெற்ற கம்ம நாயுடு எழுச்சி பேரவை என்ற அமைப்பின் சமூக ரீதியிலான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மதிமுகவின் பெண் உறுப்பினர் தனமணி தமிழர்கள் அனைவரும் வந்தேறிகள் எனப் பேச, அதற்கு தாம் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் காட்டமான எதிர்வினையாற்றியிருந்தார் துரைமுருகன். இந்த நிலையிலேயே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு நாயக்கர்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள் என வெளிப்படையாக பேசிய, மதிமுகவின் உறுப்பினரை கண்டித்து அறிக்கை வெளியிடாத தலைமை, தனமணி வெங்கட்டின் பேச்சை விமர்சித்த துரைமுருகனை உடனடியாக நீக்குவது ஏன்?.

தற்காலிக நீக்கமாகவோ, பொறுப்பிலிருந்து மட்டுமோ விடுவிக்காமல் அடிப்படை உறுப்பினரே அல்ல என அறிவிக்கும் அளவுக்கு அவர் செய்த பிழைதான் என்ன என கேள்வியெழுப்புகின்றனர் சமூக வலைத்தங்கள் உள்ளிட்டவற்றில் இயங்கும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்.

முன்னதாக, தமிழர்கள் வந்தேறிகள் என பேசிய மதிமுக உறுப்பினரை சில தினங்களுக்கு பின்னரே அக்கட்சி தலைமை கட்சியிலிருந்து நீக்கியதும், அது தொடர்பான பதிவும் மதிமுகவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலிருந்து சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.