உஷார்!! யாழில் இளையோரிடம் நுட்பமாகப் பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது

யாழ்ப்பாணத்தில் இளையோரிடம் நுட்பமாக பணம் பறிக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

வங்கிகளில் வேலை பெற்றுத் தருவதாக இந்த மோசடி இடம்பெறுகிறது. எனினும் பெரியளவில் பணத்தை கோராமல் குறிகிய தொகையை அவர்கள் கோருவதால் இந்தச் சம்பவம்கள் வெளியே வருவதில்லை.

இதில் இந்த வாரம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

இளவாளைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக அழைத்த ஒருவர், அங்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடித்து பல்கலைக்கழக அனுமதிக்காக உள்ளவர்கள் இருந்தால் கொமர்ஷல் வங்கியில் பயிலுனர் சேவைக்கு வெற்றிடம் உள்ளது, யாழ்ப்பாணத்துக்கு நேரில் வந்து தொடர்புகொள்ளுமாறு அலைபேசி இலக்கத்தை கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பு வந்த போது, பாடசாலை அதிபர் அலுவலகத்தில் இருக்கவில்லை. அதனால் உப அதிபர் இந்தத் தகவலைப் பெற்று அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருந்த மாணவி ஒருவர் யாழ்ப்பாண நகருக்கு வருகை தந்து அந்த நபருடைய அலைபேசிக்கு அழைப்பை ஏற்று விவரத்தைக் கூறியுள்ளார்.

முதலில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைக்கு வருமாறு அந்த நபர் கூறியுள்ளார். பின்னர் கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாண தலைமையகத்துக்கு வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த வங்கிக்கு யாழ்ப்பாணத்தில் எங்கு தலைமையகம் உண்டு எனக் கேட்ட போது, அந்த மாணவியை கோப்பாய்க்கு வருமாறு அந்த நபர் கூறியுள்ளார்.

பின்னர் மாணவிக்கு மீண்டும் அழைப்பை எடுத்த அந்த நபர், கார்கில்ஸூக்குச் சென்று 5 ஆயிரம் ரூபா ஈசிகாஸ் செலுத்திவிடுமாறும் அதன் பின்னர் தொலைபேசி அழைப்பு வரும் போது வருமாறும் கூறிள்ளார்.

அதனை நம்பி அந்த மாணவியும் பணத்தைச் செலுத்தத் தயாராகிய போது, அவரின் சகோதரனை சந்திக்க நேரிட்டது. அவரிடம் அந்த மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளார்.

அந்த அலைபேசி இலக்கத்தை வாங்கி சகோதரன் பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அந்த மோசடி நபர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.

மாணவி பணம் செலுத்தச் சென்ற போது, சகோதரனைச் சந்திக்க நேரிட்டதால் பண மோசடியிலிருந்து தப்பித்துக் கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொமர்ஷல் வங்கிக்கு பாடசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதுடன், அலைபேசி இலக்கமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.