கொழும்பு புறநகர் பகுதியில் கணவன் கடத்தலில் மனைவிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அதிர்ச்சிக் கடிதம்

ரத்கம – ரத்னவுதாகம பகுதியில் அண்மையில் காணாமல் போன வர்த்தகர்கள் இருவர் தொடர்பில் 25 பேரிடம் கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் வாய்மூல சாட்சியங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் இன்றைய தினம் இவ்வாறு சாட்சியங்களை பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரிடமே வாய் மூல சாட்சியங்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

ரத்னவுதாகம பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய ரசீன் சித்தக்க மற்றும் 33 வயதுடைய மஞ்சுல அசேல ஆகியோர் கடந்த 23 ஆம் திகதி காணாமல் போயுள்ளனர்

கடந்த 23 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் காவல் துறை சீருடையில் சிற்றூர்தி மற்றும் உந்துருளி ஆகியவற்றில் வருகை தந்த பிரிவினரே குறித்த வர்த்தகர்களை அழைத்து சென்றதாக உறவினர்கள் காவல் துறையினரிடம் அளித்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் காணாமல் போன இருவரில் ஒருவரின் மனைவிக்கு முகவரியற்ற கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

குறித்த கடிதத்தில் காவல் துறையினரின் உத்தியோகபூர்வ சீருடையில் வந்தவர்களால் கடத்தி செல்லப்பட்டவர்களின் தாக்குதலால் கடத்திச்செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், அதனை மறைப்பதற்காக பிரிதொரு வர்த்தகரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.