தலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்!!

24.05.1982 அன்று சென்னை பாண்டி பஜாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனுக்கும், புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை ஒன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த இரண்டு தலைவர்களும் அவர்களுடன் கூட வந்த மற்றுமிரு போராளிகளும் தமிழ்நாடு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்கள்.

இதனால் பாரிய நெருக்கடி ஒன்று உருவானது.

கைதுசெய்யப்பட்ட ஈழப்போராட்டத் தலைவர்களிடம் விசாக்களோ, கடவுச் சீட்டுக்களோ கிடையாது. இரகசியமாகவே இந்தியா வந்திருந்தார்கள். இந்தியாவில் குற்றச் செயல்களில் வேறு ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். மறுபக்கம் கைதுசெய்யப்பட்ட தலைவர்கள் சிறிலங்கா அரசினால் தேடப்பட்டு வந்தவர்கள்.

அயல்நாடுகளுடனான புரிந்துணர்வு அடிப்படையில் அவர்களைத் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று சிறிலங்கா அரசு கோரியிருந்தது. அவர்களை சிறிலங்காப் பொலிசாரிடம் ஒப்படைக்க இந்திய அரசு சம்மதித்தும் இருந்தது.

போராளித் தலைவர்களை விலங்கிட்டு அழைத்துச்செல்ல சிறிலங்காவில் இருந்து உயர்மட்ட அதிகரிகள் சென்னைக்கு வந்திருந்தார்கள்.

பாரிய இக்கட்டுக்குள் ஈழ விடுதலைப் போராட்டம் சென்றிருந்தது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்கள் அவை. இப்பொழுது உள்ளது போல, அந்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமளவில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கவில்லை. மிகவும் குறைந்த அளவிலான போராளிகள்தான் மி;குந்த அர்பனிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் நாட்டைத் தளமாகக் கொண்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தை நடாத்திக்கொண்டு இருந்தார்கள். தமிழ் நாட்டிலும் அவர்கள் ஒரு வகையிலான தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

போராளித் தலைவர்களைக் கைது செய்த தமிழ்நாடு காவல்துறை இந்தியாவில் தங்கியிருந்த மற்றைய விடுதலைப் புலி உறுப்பினர்களையும் தேடி வேட்டையை ஆரம்பித்திருந்தது.

பாரிய நெருக்கடி ஏற்பட்டது. கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், பேபி சுப்பிரமணியம் போன்ற விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் அப்பொழுது தமிழ் நாட்டிலேயே தங்கியிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களையும் பொலிசார் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.

தற்கொலை முயற்சி:

தலைமறைவாக இருந்த மேற்படி விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள் சிலர் ஒன்று கூடி நிலமையை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்தார்கள்.

தமிழ்நாடு காவல்துறையினர் கைதுசெய்துள்ள தமது தலைவரை சிறிலங்கா பொலிசாரிடம் அவர்கள் ஒப்படைத்துவிட்டால் ஒட்டுமொத்தமாக விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலமே சிதைந்துவிடும். அதனால் எப்படியாவது அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

சென்னையில் உள்ள மிகவும் உயரமான கட்டிடம்; எல்.ஐ.சி. கட்டிடம். அந்த எல்;.ஐ.சி. கட்டிடத்தின் உச்சியில் ஏறி நின்று, பிரபாகரனை விடுதலை செய்யாவிட்டால் மேலேயிருந்து குதித்துத் தற்கொலை செய்துவிடுவதாக’ முறையிடுவதென்றும், அதற்கு இந்திய அரசாங்கம் அசையாவிட்டால், ஒவ்வொருவராக கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்வது என்றும் முடிவு செய்தார்கள்.

முக்கிய போராளிகளின் அந்த முடிவை மாற்றியமைத்த பெருமை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அவர்களையே சாரும்.

போராளித் தலைவர்களை வெளியே கொண்டுவரும் பொறுப்பை பழ.நெடுமாறனும், வேறு சில தமிழ் நாட்டுத் தமிழர்களும் எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டத்தை அவர்கள் கைவிட்டிருந்தார்கள்.

சென்னை மத்திய சிறையில் போராளித் தலைவர்களைச் சென்று பார்வையிட்ட நெடுமாறன், ‘தமிழ் ஈழப் போராட்டத் தலைவர்களை இந்தியா எக்காரணம் கொண்டும் சிறிலங்காப் பொலிசாரிடம் ஒப்படைக்கக் கூடாது’ என்று ஒரு காரசாரமான அறிக்கை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் வானமலை அவர்களை அணுகி, போராளித் தலைவர்களது விடுதலைக்காக வாதாடும்படி கேட்டுக்கொண்டார். தனது நன்பனான இராதாகிருஷ்ணனையும் இந்த வழக்கிற்காக அவர் நியமித்திருந்தார். இதேபோன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் திரு.பா.மாணிக்கமும் களத்தில் இறங்கி செயற்பட்டார். தி.மு.க.வும் தனது கட்சி வழக்கறிஞர்களை நியமித்திருந்தது.

தமிழ்நாட்டில் உள்ள பல கட்சிகளையும் சந்தித்து நிலமையை எடுத்துகூறிய நெடுமாறன், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்தார்.

நிலமையை மாற்றிய தீர்மாணம்:

01.06.1982 இல் தமிழ் நாடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நெடுமாறன் கூட்டியிருந்தார். சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 20 கட்சிகள் கலந்துகொண்டன.

அப்பொழுது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் பா.உ.சண்முகம் இதில் கலந்துகொண்டார். முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் இதேபோன்ற ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைவில் கூட்டிச் செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தி.மு.கா. சார்பில் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் யாருமே கலந்துகொள்ளவில்லை. எனினும், இந்தக் கூட்டத்தின் நோக்கத்தினை வரவேற்று கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார்.

இக்கூட்டத்தில் பார்வையாளர்களாக விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு. சுப்பிரமணியம் உட்பட சிலர் கலந்துகொண்டார்கள்.

இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘திரு.பிரபாகரன் மற்றும் திரு.உமா மகேஸ்வரன் போன்ற ஈழப் போராட்டத் தலைவர்களை எவ்வித நிபந்தனையுமின்றி இந்திய அரசாங்கம் விடுதலை செய்யவேண்டும். எக்காரணம் கொண்டும் இவர்களைச் சிங்களப் பொலிசாரிடம் ஒப்படைக்கக்கூடாது’- என்று வற்புறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய இந்தத் தீர்மாணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் சிந்திக்கவைத்தது. இதன் விளைவாக போராளித் தலைவர்களை நாடுகடத்துவது நிறுத்தப்பட்டது.

ஒரு இக்கட்டான நேரத்தில், பழ. நெடுமாறன் அவர்களும், தமிழ் நாட்டுத் தமிழர்களும் துனிவுடன் செயற்பட்டு அவர்களது தலைவரையும்;, ஈழவிடுதலைப் போராட்டத்தையும் அற்புதமாகக் காப்பாற்றியிருந்ததை, ஈழ தேசம் இப்பொழுதும் நன்றியுடன் நினைவு கூறுகின்றது.

நன்றி – ibctamil –