மஹிந்தவின் திடீர் முடிவு? மைத்திரிக்கு அதிர்ச்சி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமகால அரசியல் நிலவரம் குறித்து அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன.

குறிப்பாக பொதுஜன பெரமுனவினதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் தற்போதைய நிலைமை குறித்து மஹிந்த அமரவீர கடும் அதிருப்தியில் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே, மஹிந்த அமரவீர இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த தகவல்கள் கூறியுள்ளன.

மஹிந்த அமரவீர கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியிருந்ததுடன், ஜனாதிபதியுடன் இணைந்து நெருங்கி செயற்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போதும் அவர் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டிருந்தார். இந்நிலையில், மைத்திரி – மகிந்த தரப்பு இணைந்து பாரிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியலில் இருந்து அறியமுடிகின்றது. இது குறித்து ஜனாதிபதி தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதியுடன் நெருங்கி செயற்பட்ட மஹிந்த அமரவீர சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளமை ஜனாதிபதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இது குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அரசாங்க யோசனை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று யோசனைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல ஊடகங்களில் தெரிவித்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.