அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதம்

கடந்த வருடத்தில் அக்ரஹார காப்புறுதிக்கு உரித்தான அரச ஊழியர்களுக்கு 3.9 பில்லியன் ரூபா காப்புறுதி செலுத்தப்பட்டிருப்பதாக தேசிய காப்புறுதி பொறுப்புப் பிரிவின் தலைமை நிறைவேற்று அதிகாரி சனத் ஜி.டி.சில்வா தெரிவித்துள்ளார்.

நன்மையடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமாகும். மேலும் சத்திர சிகிச்சைக்காக 900 பேருக்கு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளது.

ரண் ரக்ஷண என்ற காப்புறுதியின் கீழ் இருதய சத்திர சிகிச்சைக்காக 10 இலட்சம் ரூபாவும், ரிதி ரக்ஷண என்ற காப்புறுதியின் கீழ் 8 இலட்சம் ரூபாவும், பொதுவான காப்புறுதியின் கீழ் தலா 5 இலட்சம் ரூபா வீதம் காப்புறுதியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களுள் 9 இலட்சத்து 60 ஆயிரம் பேர் அக்ரஹார காப்புறுதியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அரச சபைகள் மற்றும் நியதிச் சபைகள் மட்டத்திலான காப்புறுதிக்கு பங்களிப்பு செய்வதற்கான வசதிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் கூடுதலான பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு ரண் மற்றும் ரிதி என்ற காப்புறுதித் திட்டத்தில் பதிவுகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். ரண் காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஊழியர் ஒருவர் திடீரென உயிரழக்கும் பட்சத்தில் 20 இலட்சம் ரூபாவும், ரிதி ரக்ஷண திட்டத்தின் கீழ்

10 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும்.

2016ம் ஆண்டுக்குப் பின்னர் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி உரித்தாகும். இவர்களிடமிருந்து மாதமொன்றுக்கு அறவிடப்படும் தொகை 200 ரூபாவாகும். 2016ம் ஆண்டுக்கு முன்ன்ர ஓய்வு பெற்றவர்கள் இந்தத் திட்டத்தில் உள்வாங்குவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் குழந்தைகள் முதல் வளர்ந்தோர் வரையில் அனைத்துப் பிரஜைகளுக்கும் சுகாதார காப்புறுதி முறையொன்றை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தேசிய காப்புறுதி பொறுப்புப் பிரிவின் தலைமை நிறைவேற்று அதிகாரி சனத் ஜி.டி.சில்வா தெரிவித்துள்ளார்.