சிறுவனை பயன்படுத்தி தங்கம் கடத்திய இலங்கை பெண்கள் கைது

8 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை சிறுவனை பயன்படுத்தி இந்தியாவுக்கு கடத்திச் சென்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்கள், மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து சென்ற இவர்களை இந்திய சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவர் தங்கத்தை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட சிறுவனின் தாய் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிறுவன் ஆடைகள் மற்றும் பாதணியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 11 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்க வர்த்தகத்தில் பிரபலமான சுவிஸர்லாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த தங்கம் இந்திய ரூபாய் மதிப்பில் 3 கோடியே 31 லட்சம் ரூபாய் எனவும் இலங்கை ரூபாய் மதிப்பு 8 கோடியே 32 லட்சத்திற்கும் மேல் என தெரியவருகிறது.

சிறிய பிள்ளைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தங்க கடத்தலை முறியடிக்க இந்திய சுங்க அதிகாரிகள் நடத்திய வரும் விசேட தேடுதலின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் மிக நீண்டகாலமாக தங்க கடத்தில் ஈடுபட்டு வரும் பெண் எனவும் இந்த பெண் மற்றைய பெண்ணையும் அவரது மகனையும் தங்க கடத்தலுக்கு பயன்படுத்தியுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிறுவன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.