ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை புரட்டிப்போட்ட சந்தர்ப்பம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் உச்சக்கட்ட பலவான்களாக இருந்தபோது இலங்கை அரசியலில் பாரிய குழப்ப நிலைகள் தோற்றம்பெற்றன. போரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஈழப் போரியல் வரலாற்றையே புரட்டிப்போகுமளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன் தொடக்கப் புள்ளியாக வந்ததே புரிந்துணர்வு உடன்படிக்கை.

சூரியகதிர் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் வன்னிக் காட்டுக்குள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற கனவு இலங்கை பாதுகாப்புத்துறைக்கு அன்று ஏற்பட்டிருந்த ஒன்று. 1995ஆம் ஆண்டு சூரியகதிர் இராணுவ நடவடிக்கையினால் யாழ்ப்பாணக் குடாநாட்டை முற்றாக இழந்த விடுதலைப் புலிகள் வன்னிக்குப் பின்வாங்கிச் சென்றனர்.

புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடும் என்று நம்பியிருந்த படைத்துறைக்கு அவர்களின் எதிர்ச்சமர்கள் பாரிய பேரிடியாக விழத்தொடங்கியது உண்மையே. ஜெயசிக்குறு முறியடிப்புச் சமர், ஓயாத அலைகள் நடவடிக்கைகள் மற்றும் தீச்சுவாலை போன்ற மரபுவழி இராணுவ நடவடிக்கைகளும் கொழும்பில் கட்டுநாயக்க விமானத்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதல் என்பன இலங்கை படைகள்மீது பாரிய இழப்புக்களைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தியவண்ணமிருந்தன.

அன்றைய சந்திரிகா தலைமையிலான அரசாங்கத்தின்மீது எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அழுத்தங்களைக் கொடுத்தவண்ணமிருந்தன. அரசாங்கத்தின்மீது எதிர்க்கட்சிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் நம்பிக்கைகள் தளர்வடைந்துசென்ற போதுதான் பொதுத்தேர்தல் ஒன்று வந்தது. இதன்படி 2001இல் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றியீட்டி ஆட்சியினைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இரண்டு தரப்பினருக்குமிடையில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமுகமாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தானது. அந்த ஒப்பந்தமே போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தமாக இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோட்டில் பதிவாகியது.

2002 ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் ஈழப் போராட்டத்தின் எதிர்பாராத மாற்றங்கள் பலவற்றைத் தேடிக்கொடுத்தது. காட்டிக்கொடுப்புக்கள், வன்மங்கள், பழிதீர்த்தல்கள், நம்பிக்கைத் துரோகங்கள் என அனைத்தும் உருவாவதற்கு அடிநாதமாய் விளங்கியது.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரை பின்வருமாறு அமைந்திருந்தது. அதாவது,

“இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு ஒன்றைக் காண்பதுவே சிறிலங்கா ஜனநாயகச் சோசலிசக் குடியரசினதும் (Sri Lanka), தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE) ஒட்டுமொத்தமான நோக்கமாகும்.”

இந்த முன்னுரையானது ஒப்பந்தத்தின் ஒட்டுமொத்தமான நோக்கத்தினையும் தெளிவுபடுத்தியிருந்தாலும், அது பல்வேறு சரத்துக்களை தன்னகத்தே கொண்டு அவற்றினை போரில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் கட்டாயமாக கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தியலை கொண்டிருந்தது. அமைதியை நிலைநாட்டும் பொருட்டு பகைமை நிலையை முடிவுக்கு கொண்டு வந்து அதன் ஊடாக சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால் ஒப்பந்தத்தில் கூறப்பட்டதன்படி பகைமை நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக இல்லை. ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்திலேயே அது பலமுறை மீறப்பட்டு வந்தது. விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று அந்தக் காலத்தில் மூழ்கடிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலிந்த தாக்குதல்களும் நில ஆக்கிரமிப்புக்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த இடத்தில் ஒப்பந்தத்தின் முக்கியமான சரத்துக்கள் சிலவற்றை நாம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். ஒப்பந்தத்தின் அந்த முக்கியமான சரத்துக்கள் இலங்கை அரசாங்கத்தைக் குறிவைத்தே உருவாக்கப்பட்டன. அவை, ஒப்பந்தம் இரத்தாகிய 2008 ஜனவரி 15 வரை எவ்வளவுக்கெவ்வளவு பேணப்பட்டுவந்தன என்பது இங்கே முக்கியமான ஒன்றாகும்.

குறிப்பாக ஒப்பந்தத்தின் 1.3ஆம் சரத்து முக்கிய விடயத்தை குறித்து நின்றது. அதாவது,

“இலங்கை இறைமையையும், நில ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கின்ற தமது சட்டரீதியான பணியை மேற்கொள்கின்ற இலங்கையின் ஆயுதப்படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.”

இந்த ஒப்பந்தம் மீறப்பட்டமையே இறுதிப்போருக்கான மூலாதாரம் என்பது யாவருமறிந்ததே. இதனைத் தொடர்ந்து சரத்து 1.9 பின்வருமாறு அமைந்திருந்தது. அதாவது,

“இரண்டு தரப்பினரது படைகளும் சரத்து 1.4 மற்றும் 1.5 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளபடி, ஆரம்பத்தில் இருந்த தத்தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் இருக்க வேண்டும்.”

ஆனால் கிழக்கிலங்கையின் மாவிலாறில் படையினர் மேற்கொண்ட முதலாவது அத்துமீறிய யுத்த நகர்வினைத் தொடர்ந்து அந்த சரத்தும் முழுமையாக மீறப்பட்டது.

மேலும், ஒப்பந்தத்தின் இன்னொரு முக்கிய பகுதியான 1.2.B சரத்து, விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியது. ஆனால் ஒப்பந்தம் இரத்தாவதற்கு முன்னரே வன்னியில் பல விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 26ஆம் நாள் விடுதலைப்புலிகளும் தமது முதலாவது வான் தாக்குதலை கொழும்பில் மேற்கொண்டனர்.

பின்னர் இரண்டு தரப்பினரும் தமது வான் தாக்குதலை பரஸ்பரம் மேற்கொண்டிருந்தாலும் விடுதலைப் புலிகளின் இலக்குகள் அரசாங்கத்தின் பொருளாதார மையங்கள் மற்றும் இராணுவ நிலைகள் என அமைந்திருக்க இலங்கை வான் படைகளின் இலக்குகள் பெரும்பாலும் மக்கள் குடியிருப்புக்களை மையமாகக் கொண்டிருந்தன. ஒப்பந்தத்தின் இந்தச் சரத்தும் முற்றாக மீறப்பட்டது என்றுதான் சொல்லமுடியும்.

போராட்ட வரலாற்றில் துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடு என்பது முற்றுமுழுதான நாசகாரச் செயற்பாடுகளை முதன்மைப்படுத்தியிருந்தது. இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய இந்த ஆயுதக் குழுக்கள் கடத்தல், கொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இதனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்த விடயமும் முக்கியமான ஒன்றாக சேர்க்கப்பட்டது.

ஒப்பந்தத்தின் 1.8 ஆம் சரத்து, “யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் தினத்திலிருந்து முப்பது நாட்களுக்குள், தமிழ்த் துணை இராணுவக் குழுக்களை சிறிலங்கா அரசு ஆயுதமற்றவர்களாக்கும்.” என்பதாக அமைந்திருந்தது.

ஆனால் இந்த சரத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றே. யுத்தம் ஆரம்பிக்கப்படுமுன்னரே இந்த துணை ஆயுதக் குழுக்கள் அரசாங்கத்தினால் விரிவுபடுத்தப்பட்டே வந்துள்ளன. குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த கிழக்கு மாகாணத் தளபதி, கருணா தலைமையிலான குழு எவ்வாறு அவ்வமைப்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனியொரு ஆயுதக் குழுவாக இயங்கவிடப்பட்டது என்பதை இங்கு நாம் நினைவுகூரத்தக்கவர்களாகின்றோம்.

இவ்வாறாக ஈழப் போராட்ட வரலாற்றில் நிலைமையைத் தலைகீழாக்கிய பல மாற்றங்கள்கூட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானபின்புதான் தோற்றம்பெற்றன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் படை வலுச் சமநிலையில் வெற்றியாளர்களாக இருந்த விடுதலைப் புலிகள் எவ்வாறு வீழ்த்தபட்டார்கள் என்ற கேள்வி ஒன்று எழுமாயின் அதற்கான ஒட்டுமொத்த குத்துவெட்டுக் காரணிகளும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திய சமாதான காலத்திற்குள்ளேயே முளைவிட ஆரம்பித்தன என்பதுதான் இங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்!