பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் சிறீதரன் எம்.பி!

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கடந்த 25ம் திகதி மேற்கொண்ட போராட்டத்தில் தமது தரப்பினால் தவறு இடம்பெற்றுள்ளமைக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்.

“கடந்த 25ம் திகதி கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டத்தில் சில பிரதேச சபை உறுப்பினர்களும், மேலும் சில உறுப்பினர்களும் நடந்து கொண்ட விதம் தொடர்பில் செய்திகள், காணொளிகள் ஊடாக அறிந்துகொண்டோம்

அதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர்கள் அன்று அவ்வாறு நடந்து கொண்டமை தவறு என்பதை கண்டறிந்தோம்.

இந்நிலையில், குறித்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேவேளை அன்று அவர்கள் நடந்து கொண்ட விதம் தொடர்பிலும், ஊடகவிலாளர்களுடன் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகின்றேன்.

குறித்த போராட்டத்தில் காணாமல் போனோர் விடயத்தில் பொறுப்பு கூறவேண்டியவர்களும் கலந்துகொண்டு கோபத்தை சீண்ட கூடிய வகையில் நடந்து கொண்டனர்.

அதனாலும் இவ்வாறு இளைஞர்கள் சிலர் சீண்டப்பட்டு அவர்களின் உணர்வுகள் தூண்டப்பட்டுள்ளன. ஈபிடிபியினராக இருந்தவர்கள் இன்று சுயேட்சை குழுவாக தம்மை காட்டிக்கொண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.”

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, விடுதலைப் புலிகள் கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் உண்மையா என அவரிடம் வினவியபோது?

“சம்பந்தன் அவர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் உண்மை தன்மை குறித்து தெரியாது.

நான் ஒருபோதும் அவரை சுடுவதற்காக திரியவில்லை.மகிந்த ராஜபக்ச விடுதலை புலிகளின் சுடப்படும் பட்டியலில் தான் இருந்ததாக தெரிவித்தபோது அப்பட்டியலில் தானும் இருந்ததாக சம்பந்தன் ஐயாவே தெரிவித்திருந்தார்.

ஆனாலும் அவரை தலமையாக கொண்டே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு விடுதலை புலிகள் தேர்தல் வெற்றியும் கண்டனர்” என தெரிவித்தார்.

விடுதலை புலிகளும் குற்றம் செய்தனர் என்பது தொடர்பில் சுமந்திரன் கூறி வருகின்ற விடயம் தொடர்பில் உண்மைத்தன்மை உள்ளதா என அவரிடம் வினவியபோது,

“யுத்தம் இடம்பெறுகையில் எவரும் உண்மைதன்மையாக செயற்பட மாட்டார்கள். போராட்ட இயக்கங்களிடம் உண்மை தன்மை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது.

ஐநா அமர்வில் விடுதலை புலிகளும் நான்கு குற்றங்களை செய்துள்ளனர் என அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் படையினரே அதிகம் குற்றம் செய்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உள்ள ஒரு நாட்டில் அவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களும் பிரதானமாக காணப்படும்.

அதேவேளை விடுதலைப்புலிகள் குற்றம் இழைத்ததாக கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு அவ்வமைப்பை வழிநடத்தியவர்கள் இல்லை. அவ்வாறு இருந்தால் அவர்களிடம் விசாரணை செய்யட்டும்.

ஒரு கட்டத்தில் நான்கு இலட்சத்திற்கு மேல் மக்கள் அங்கு உள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர்.

பசில் ராஜபக்ச மிக குறைவான ஆட்களே அங்கு இருந்தனர் என தெரிவித்தபோது ஆனந்தசங்கரி, ராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதென பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதையும் மீறி படையினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். கொத்து குண்டுகள், விமான தாக்குதல்களாலும் தாக்குதல்களை மூர்க்கமாக மேற்கொண்டனர்.

இவ்வாறான நிலையில் யுத்த குற்றம் தொடர்பில் அதிகம் பொறுப்பு கூற வேண்டியவர்கள் படையினரே” எனவும் தெரிவித்தார்.

சுமந்திரன் அவர்கள் கூறிய கூற்று சரியானதா என மீண்டும் அவரிடம் வினவியபோது,

சுமந்திரன் அவர்கள் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு இருக்கவில்லை. இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் அவருக்கு தெரியாது.

வெறுமனே அவர் அறிக்கைகளை வைத்தே அவர் கருத்துக்களை தெரிவித்து வரலாம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்