சென் ஜோன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்ட டினோஷன்

யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 113வது வடக்கின் பெரும் சமரின் முதல் நாள் ஆட்டம் மிக விறுவிறுப்பான முறையில் இன்று (07) நடைபெற்று முடிந்துள்ளது.

நூற்றாண்டுகள் தாண்டி தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வடக்கின் பெரும் சமரில், இந்த முறை சென் ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவராக மர்பின் அபினாஷ் செயற்படுவதுடன், யாழ். மத்தியக் கல்லூரி அணியின் தலைவராக செல்வராசா மதுசன் செயற்பட்டு வருகிறார்.

இதன்படி சிறந்த அணித் தலைவர்கள் மற்றும் பலமான அணிகள் என ஆரம்பிக்கப்பட்ட இவ்வருட பெரும் சமரின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியக் கல்லூரி அணி, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

யாழ். மத்தியக் கல்லூரி அணியின் பணிப்புக்கு ஏற்ப முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென் ஜோன்ஸ் அணிக்கு ஆரம்பம் முதல் கடுமையான சவால்களை கொடுக்கும் வகையில், மத்தியக் கல்லூரி அணியின் பந்து வீச்சுகள் அமைந்திருந்தன.

முக்கியமாக ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர்களாக இணைந்த அணித் தலைவர் மதுசன் மற்றும் இயலரசன் ஆகியோர் சென் ஜோன்ஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்களை அடுத்தடுத்து ஓய்வறை நோக்கி திருப்பியனுப்பினர்.

முக்கியமாக, சென். ஜோன்ஸ் அணிக்காக வேகமாக ஓட்டங்களை குவிக்கக்கூடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சௌமியன் மற்றும் அவருடன் இணைந்து களமிறங்கும் மற்றுமொரு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஜன் ஆகியோரை இயலரசன் ஆட்டமிழக்கச் செய்ததுடன், ஹேமதுசன் மற்றும் டெனுசன் ஆகிய முன் வரிசை வீரர்களையும் களத்திலிருந்து வெளியேற்றினார்.

இவருக்கு உதவியாக அணித் தலைவர் மதுசன், முதன்முறையாக பெரும் சமர் போட்டியில் விளையாடிய வினோஜனை ஓட்டங்களின்றி வெளியேற்றினார்.

முன் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, அணித் தலைவர் மர்பின் அபினேஷுடன் இணைந்த, டினோஷன் விக்கெட்டுகள் சரிவதை தடுத்து சிறிய இணைப்பாட்டமொன்றினை வழங்கினர். எனினும், இந்த இணைப்பாட்டம் 37 ஓட்டங்களுடன் கட்டுப்படுத்தப்பட, அபினேஷ் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிக்கப்பட, தனியாளாக டினோஷன் ஓட்டங்களை குவித்த போதிலும், மதிய போசன இடைவேளையின் போது சென் ஜோன்ஸ் அணி 89 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

மதிய போசன இடைவேளைக்கு பின்னர் ஆட்டத்தை தொடர்ந்த சென் ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பில், டினோஷன் மாத்திரம் ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, பந்துகளை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர் நோக்கிய பின்வரிசை வீரர்கள் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தனர்.

எனினும், அரைச் சதத்தைக் கூட கடக்கமால் இறுதி வீரருடன் இணைப்பாட்டத்தை பகிர்ந்த டினோஷன் வேகமாக ஓட்டங்களை கடக்க ஆரம்பித்தார்.

இம்முறை, வடக்கின் சமரில் முதல் அரைச் சதத்தை கடந்த இவர், இறுதி வீரரின் தற்காப்பு ஆட்டத்தை பயன்படுத்தி அணிக்கான ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டார். சிறப்பாக ஓட்டங்களை குவித்த டினோஷன் 11 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 98 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போதும், துரதிஷ்டவசமாக வியாஸ்காந்தின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து 2 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டு களத்திலிருந்து வெளியேறினார்.

இவரது ஆட்டமிழப்புடன் சென் ஜோன்ஸ் கல்லூரியின் இன்னிங்ஸ் நிறைவுக்கு வர அந்த அணி மொத்தமாக 46.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில், இறுதி வீரராக களமிறங்கிய எண்டன் சரண் 26 பந்துகளை எதிர்கொண்டு எவ்வித ஓட்டங்களையும் பெறாத போதும், டினோஷனுடன் இணைந்து 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற முக்கிய காரணமாக இருந்தார்.

யாழ். மத்தியக் கல்லூரி அணி சார்பில், பந்து வீச்சில் மிரட்டிய இயலரசன் 54 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்த, மறுபக்கம் வியாஸ்காந் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தனர். அதேவேளை, அணித் தலைவர் மதுசன் உபாதை காரணமாக 4 ஓவர்களை மாத்திரமே வீசியிருந்த போதும், ஒரு விக்கெட்டினையும், பிரவீன்ராஜ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர்.

சென் ஜோன்ஸ் கல்லூரியின் ஆட்டம் நிறைவுக்குவர, தேநீர் இடைவேளையுடன் தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்தியக் கல்லூரியின் ஆரம்ப விக்கெட் முதல் பந்திலேயே வீழ்த்தப்பட்டது. சென் ஜோன்ஸ் அணி சார்பாக 98 ஓட்டங்களை விளாசிய டினோஷன், மத்தியக் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சாரங்கனை முதல் பந்தில் வெளியேற்றி அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

எனினும், இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த யாழ். மத்தியக் கல்லூரியின் இயலரசன் மற்றும் இந்துஜன் ஆகியோர் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர். ஓட்டவேகம் குறைவாக இருந்த போதும், இவர்களது நிதானமான ஆட்டம் அணியின் துடுப்பாட்டத்தை வலுப்படுத்திக்கொண்டிருந்தது.

எவ்வாறாயினும், மீண்டும் பந்து வீசும் முகமாக வருகைத்தந்த டினோஷன் நிதானமாக துடுப்பெடுத்தாடிய இந்துஜனின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்துஜன் அணிக்காக 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொடுத்த போதிலும், 67 பந்துகளுக்கு முகங்கொடுத்து அணிக்கு வலுசேர்த்திருந்தார்.

இதன் பின்னர் களம் நுழைந்த ஜெயதர்சன், இயலரசனுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, யாழ். மத்தியக் கல்லூரி அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில், இயலரசன் 25 ஓட்டங்களையும், ஜெயதர்சன் 08 ஓட்டங்களையும் பெற்று களத்தில் உள்ளனர். பந்து வீச்சில், டினோஷன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேநேரம், யாழ். மத்தியக் கல்லூரி அணியானது, சென் ஜோன்ஸ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை எட்டுவதற்கு இன்னும் 122 ஓட்டங்களை பெறவேண்டும்.