இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை அழிக்க முடியாது! பெருமையுடன் கூறிய விவேக்

இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய விவேக் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த உலகில் கடைசி இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை யாராலும் அழிக்கமுடியாதென அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அத்தோடு, 2ஆம் நூற்றாண்டிலிருந்து ஒரு பழைமைவாய்ந்த, தொன்மையான பூமி இலங்கையாகும். சுமார் 35000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளை வரலாற்று ஆசிரியர்கள் எடுத்த ஒரே பூமி இலங்கையென பெருமையுடன் குறிப்பிட்டார்.

மழைவளம், கனிம வளம், காற்று வளம், நீர் வளம், நில வளம், கடல் வளம் என எல்லா வளங்களையும் கொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட பூமியென்றால் அது இலங்கை பூமி மாத்திரமே என்றும் கூறினார்.

இவ்வாறான வளம் நிறைந்த நாட்டில் ஒற்றுமை மாத்திரம் இல்லாமல் உள்ளதென குறிப்பிட்ட விவேக், அதனை சரிசெய்துவிட்டால் உலகில் இலங்கை மக்களை விஞ்சியவர்கள் யாரும் இருக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டினார்.