காணாமல் போனவர்களின் உறவினர்கள் படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்! அமெரிக்கா

காணாமல் போனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமை குறித்த அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

2018ம் ஆண்டுக்கான மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக காணாமல் போனவர்களின் மனைவியர், தங்களது கணவர் தொடர்பிலான விபரங்களை கோரி செல்லும் போது படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் அதிகளவில் சித்திரவதைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஒப்புதல் வாக்கு மூலங்களைப் பெற்றுக்கொள்ளவும் வேறும் தேவைகளுக்காகவும் இவ்வாறு பொலிஸார் தடுப்புக் காவலில் உள்ளவர்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டவிரோத படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது அடக்குமுறைகள், பலவந்ததடுப்பு வைப்புக்கள், இணைய தளங்கள் முடக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கையில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்தப்படுவதாகவும் மனித உரிமைகள் மீற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் யுத்தத்தின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எவ்வித பொறிமுறைமை ஒன்றை இதுவரையில் உருவாக்கத் தவறியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.