அரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ள செவ்வியில், அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆறாயிரம் இடைக்கால நிதி உதவியை வழங்குவதற்கு பதிலாக ஆகக்குறைந்தது 20 இலட்சம் ரூபாவை அரசாங்கம் வழங்க வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் வரை அவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாவை உதவித் தொகையாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்காக அரசாங்கம் வரவு – செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. அதுவும், நபரொருவர் காணாமல் போனதாக அரசிடம் சான்றிதழ் பெற்றுக் கொண்ட குடும்பங்களுக்கே, இந்த உதவுத்தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாணத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் வரையில் காணாமல் போயுள்ளனர். வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது, இவர்களுக்கு 06 மாதங்களுக்கு வழங்கவே போதுமானதல்ல.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நஷ்ட ஈடாக 20 அல்லது 50 இலட்சம் ரூபாவினை அரசாங்கம் வழங்க வேண்டும்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ´மாதாந்தம் 06 ஆயிரம் ரூபா´ எனும் உதவித் தொகையானது பிச்சைக் காசு போன்றதாகும்” என அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.