எஞ்சிய உறவுகளையும் பறிகொடுப்பதற்காகவே ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம்!

சிறிலங்கா இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சாட்சிகளாக இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எஞ்சிய உறவுகளையும் பறிகொடுப்பதற்காகவே ஜெனிவாவில் ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களில் 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் தமக்கான தீர்வினை பெற்றுத்தருவார்கள் என நம்பியிருந்த சர்வதேச சமூகம் சிறிலங்காவிற்கு கால அவகாசம் வழங்கி தம்மை ஏமாற்றிவிட்டதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி கவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவிற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் வகையில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 40 இன் கீழ் ஒன்று தீர்மானம் மார்ச் 21 ஆம் திகதியான நேற்று வியாழக்கிழமை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேறியது.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என கோரி தாம் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் சர்வதேச சமுகம் அதனை கவனத்தில் கொள்ளவில்லையென முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி கவலை வெளியிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படாது, சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற ஜெனிவாவில் அமர்வுகளில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா வெளிவி்வகார அமைச்சரின் உரைக்கு கண்டனம் வெளியிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, வெளிநாட்டு நீதிபதிகளை நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்றால் காணாமல் போனோர் தொடர்பான நிரந்தர அலுவலகமும் தமக்கு தேவையில்லையென குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் மீண்டும் சிறிலங்கா அரசுக்கு கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வடக்கு கிழக்கு மக்கள் சரியான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் யாராவது ஒரு உறவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தால், காணாமல் போன உறவுகளின் வேதனை அவர்களுக்கும் தெரிந்திருக்கும் என்றும் கடும் ஆத்திரத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் குறிப்பிட்டார்.