இலங்கை கடல் எல்லைகுள் 9 வெளிநாட்டவர்களுடன் கைப்பற்றப்பட்ட மர்ம படகு!

இலங்கை கடத்தி வரப்பட்டுக்கொண்டிருந்த சுமார் 130 கோடி ரூபா பெறுமதியான 107.22 கிலோ கிராம் நிறை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் காலி – அக்குரல கடற்பரப்பில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படை, பி.என்.பீ. எனப்படும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் கடற்படை ஒன்றிணைந்து முன்னெடுத்த விஷேட சுற்றிவளைப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.

காலி – அக்குரல கடற்பரப்பில், மேற்கு நோக்கி 10.5 கடல் மைல் தூரத்தில் ஈரான் ட்ரோலர் படகொன்றினை சுற்றிவளைத்து, அதிலிருந்த 9 ஈரானியர்களுடன் இந்த போதைப் பொருள் நேற்று காலை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டாரவுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் நேற்று மாலை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியே பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதனை தெரிவித்தார்.

ஹெரோயினுடன் ஈரான் ட்ரோலர் படகொன்று இலங்கையில் கைப்பற்றப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும். இதற்கு முன்னர் 2016 மார்ச் 31 ஆம் திகதி கடற்படையுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு முன்னெடுத்த நடவடிக்கையில் 10 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டதுடன் பெரும்தொகை போதைப் பொருளும் மீட்கப்பட்டன.

நேற்று கைது செய்யப்பட்ட 9 ஈரானியர்கள் மற்றும் ஈரான் ட்ரோலர் படகு குறித்த சுற்றிவளைப்பானது பொலிஸ் விஷேட அதிரடிப் படைக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய இடம்பெற்றிருந்தது.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் போதைப் பொருள் மற்றும் பாதாள உலக ஒழிப்பு குறித்த உளவுத் தகவல் மையத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம், நேற்றைய சுற்றிவளைப்பு திட்டமிடப்பட்டது.

பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மற்றும் கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார ஆகியோரின் தகவல்களுக்கு அமைய, காலி கடற்படை முகாமில் இருந்து நேற்று முன்தினம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற குறித்த தகவல், அதன் கட்டளைத் தளபதியும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர். லதீபுக்கு அளிக்கப்பட்டு அவரின் வழி நடத்தலில் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழான குழுவொன்றும் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹிரியாதெனியவின் கீழ் செயற்படும் குழுவொன்றும் சிறப்பு சுற்றிவளைப்புக்காக நேற்றுமுன்தினம் காலி சென்றுள்ளது.

அங்கு காலி கடற்படை முகாமில், கடல் சார் சுற்றிவளைப்புக்கு பயிற்சி பெற்ற சிறப்பு கடற்படையுடன் கடற்படை கப்பலில் சுற்றி வளைப்புக்காக அதிகாரிகள் சென்றுள்ளனர். இதன்போதே காலி அக்குரல கடற்பரப்பில் சந்தேகத்துக்கு இடமான ட்ரோலர் படகு கண்காணிக்கப்பட்டுள்ளன.

அப்படகை நெருங்கி அதனை சுற்றிவளைத்த கடற்படையினரும் பொலிஸாரும், அப்படகிலிருந்து 4 உரப் பைகளில் கட்டப்பட்டிருந்த 99 சிறிய பக்கற்றுக்களில் பொதி செய்யப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர். இதனையடுத்து அங்கிருந்த ஒன்பது பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 9 பேரும் ஈரான் பிரஜைகள் என்பதுடன் அவர்கள் முதலில் தாம் மீனவர்கள் எனவும் மீனவ நடவடிக்கைகளுக்காக கடலுக்கு வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். எனினும் அவர்கள் இருந்த ட்ரோலர் படகிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்கான எந்த தடயங்களும் பொலிஸாருக்கு கிடைத்திருக்கவில்லை.

எனினும், 15 நாட்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் என்பன அந்தப் படகில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 14 ஆம் திகதி ஈரானின் கொனாக் துறைமுகத்தில் இருந்து இந்த ட்ரோலர் படகு பயணித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த படகில் இருந்து 9 கையடக்கத் தொலைபேசிகளும் ஒரு செய்மதி தொலைபேசியும் போதைப் பொருளுக்கு மேலதிகமாக மீட்கப்பட் டுள்ளது.

நேற்று முன்தினம் கடலுக்கு சென்ற அதிகாரிகள் நேற்று காலையே குறித்த ட்ரோலர் படகை கைப்பற்றி அதிலிருந்தோரை கைது செய்த நிலையில், நேற்று பிற்பகல் அவர்களை கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். இதன்போது கொழும்பு துறைமுகத்தில் உள்ள கடற்படை இறங்குதுறையான ரங்கல இறங்குதுறையில் குறித்த படகு நங்கூரமிடப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு ஆரம்பகட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த போதைப் பொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதை குறித்த படகின் பயணப் பாதையை வைத்து உறுதி செய்யும் பொலிஸார், படகானது இலங்கை கடல் எல்லைக்குள் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இந்த போதைப் பொருளை பொறுப்பேற்க இலங்கையில் காத்திருந்த போதைப் பொருள் வர்த்தகர் யார் என்பதைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் போதைப் பொருள் பொதிகளில் உள்ள இறப்பர் முத்திரையை மையப்படுத்தி இந்த போதைப் பொருள் எங்கிருந்து வந்தது, வேறு நாடுகளுக்கும் இப்படகில் போதைப் பொருள் கடத்தப்பட்டதா, இறுதியாக இலங்கைக்கு வந்ததா என்ற விடயங்களை வெளிப்படுத்தவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் இந்த போதைப் பொருள் கைப்பற்றப்படும் போது, படகில் இருந்து பெரும் தொகை போதைப் பொருள் கடலில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியான போதும், அவ்வாறான எதுவும் நடக்கவில்லை என பொலிஸ் பேச்சாளரும், கடற்படை பேச்சாளரும் உறுதி செய்தனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகரவின் தகவல்கள் பிரகாரம்,
கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் 732 கிலோ ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டிருந்தது. எனினும் இவ்வருடத்தில் நேற்று வரை மட்டும் 840.55 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனைவிட போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட 9 ஈரானியர்களுடன் சேர்த்து 31 வெளிநாட்டவர்கள் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஈரானியர்கள் 10 பேர் அடங்குகின்றனர். நேற்று கைதான ஒன்பது பேருக்கு முன்னர் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி 400 கிராம் குஷ் எனப்படும் போதைப் பொருளுடன் ஈரான் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனை விட கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் 41 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 2016 ஆம் ஆண்டே அதிக ஈரானியர்கள் இலங்கையில் போதைப் பொருள் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டிருந்தனர். அந்த ஆண்டில் 83 வெளிநாட்டவர்கள் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நிலையில் அதில் 10 பேர் ஈரானியர்களாவர்.

சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் அதற்கான தடுப்புக் காவல் உத்தரவைப் பெற கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.