அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஏற்பட்டுள்ள சோகம்!

கடந்த 10 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை புற்றுநோய் தாக்கியுள்ளது.

அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென தமிழ் அகதிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ராஜன் என அழைக்கப்படும் சிவகுரு நவநீதராசா கடந்த 2009ம் ஆண்டு இலங்கை யுத்தத்திலிருந்து தப்பிவந்து அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரியிருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு 2010ஆம் ஆண்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன்போதும் ASIO பிரிவினரின் எதிர்மறை அறிக்கையையடுத்து அவர் குடிவரவு தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டதாக தமிழ் அகதிகள் கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ASIO பிரிவினரின் எதிர்மறை அறிக்கை மீளப்பெறப்பட்டு ராஜன் எவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானவர் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.

இதன்போதும், அப்போது கொண்டுவரப்பட்ட குடிவரவுச்சட்ட மாற்றத்தின்படி அவர் வேறொரு புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனினும் குடிவரவுத் திணைக்களம் ராஜனின் பாதுகாப்பு விசா விண்ணப்பத்தை நிராகரித்ததையடுத்து மீள்பரிசீலனைக்காக Administrative Appeals Tribunal-இல் மனுத்தாக்கல் செய்துவிட்டு கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக Administrative Appeals Tribunal முடிவுக்காக ராஜன் காத்திருக்கிறார்.

இந்தநிலையில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கிறிஸ்மஸ் தீவு, விலவூட், மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாம் என பல தடுப்புமுகாம்களில் வாழ்ந்துவந்ததால் ஏற்கனவே மனரீதியாக பாதிக்கப்பட்ட ராஜன் தற்போது Leukaemia-புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ் அகதிகள் கழகம் குறிப்பிட்டுள்ளது.

தடுப்புமுகாமில் தொடர்ந்தும் இருப்பது ராஜனின் உடல்நிலையை மேலும் மோசமடையச் செய்யும் என்பதாலும், அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் அவரை விடுதலை செய்யவேண்டுமென ராஜனின் குடும்பத்தினரும் நண்பர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது 45 வயதாகும் ராஜன் ஏற்கனவே தனது வாழ்க்கையின் முக்கிய பகுதியை தடுப்புமுகாமில் கழித்துவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் ஏதிலிகள் கழகம் உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.