திருகோணமலையில் பொலிஸாரிடம் சிக்கிய நுதான திருட்டில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள்!

திருகோணமலையில் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றிலிருந்த கணிணி மற்றும் அதன் மென்பொருட்களின் கடவுச்சொற்களை நூதனமான முறையில் திருடி கப்பம் கேட்ட மூவரை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உவர்மலைப் பகுதியில் இயங்கிவந்த குறித்த அலுவலகம் ஒன்றிலிருந்தே இவ்வாறு பொருட்கள் களவாடப்பட்டு கப்பம் கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 22,25,27 வயதுடைய சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் வேலைபார்த்து வந்த நபர் ஒருவருக்கு அவ்அலுவலகத்தால் போதுமான சம்பளம் வழங்கப்படாதுள்ளது.

இதன் காரணமாக குறித்த நபர், ஜயவர்தனபுர பல்கலைக்களகத்தில் கல்வி பயிலும் இரண்டாம் வருட தகவல் தொழில்நுட்ப பீட மாணவனான அவரது தம்பியாருடன் இணைந்து குறித்த குற்றச் செயலில் ஈடுபட்டமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் குறித்த அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் முக்கியக் கடவுச்சொற்களை நூதனமான முறையில் திருடி, அவ்அலுவலகத்தின் முகாமையாளரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தமக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் வழங்கினால் தாம் குறித்த கடவுச்சொற்களை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த நிறுவனத்தினரால் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களையும் அதற்கு பயன்படுத்திய மடிக்கணிணி மற்றும் கையடக்கத்தொலைபேசி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் குறித்த அலுவலகமானது பிரித்தானியாவில் உள்ள 36 வாடிக்கையாளர்களுக்கு வேலை பார்த்து வந்ததாகவும் குறித்த குற்றச்செயலின் காரணமாக அவ் நிறுவனமானது ஒரு கோடி தொன்னூற்று மூன்று இலட்சம் ரூபாய் (19,300,000) நட்டமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமண்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருப்பதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.