சிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கடை ஒன்றை உடைத்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதன் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள பித்தளை, இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் கடந்த டிசெம்பர் மாதம் திருட்டுப் போயிருந்தன. எனினும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் செயற்படும் சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர், கொட்டடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றுக் கைது செய்தனர். அவருடமிருந்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதனைப் பொருத்தும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

அவை தொடர்பில் சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவை திருடப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் கூறினர்.