உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழாக்கம் யாழ்ப்பாணத்தில் மும்முரம்

க.பொ.த. உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகள் யாழ்ப்பாணத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் தமிழ்மொழி மூல உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் இணையத்தளத்தில் பதிவிறக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து முன்னெடுத்து வருகின்றனர்.

க.பொ.த. உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழ்மொழியில் வெளியிடப்படவில்லை என ஆசிரியர் சங்கங்களால் கல்வி அமைச்சிடம் முறையிடப்பட்டு வந்தது.

இதுதொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளை கடந்த மாத இறுதியில் அழைத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உயிரியல் பாட ஆசிரியர் கைநூலை தமிழ்மொழியில் வெளியிடுவதில் உள்ள தாமதங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதற்கான பணிகளை முன்னெடுக்க தமக்கு உரிய வளங்களை வழங்கவேண்டும் என்று அதிகாரிகள் கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு அவரது அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தேசிய கல்வி நிறுவகத்தின் உயிரியல் பாடத்துக்கு பொறுப்பான அதிகாரி யாழ்ப்பாணத்துக்கு கடந்த வாரம் வருகை தந்தார். அவர் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவியுடன் உயிரியல் பாட ஆசிரியர் கைநூலை தமிழ் மொழிபெயர்ப்புச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இந்த மொழிபெயர்ப்புப் பணியில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் கடமையாற்றும் துறைசார் கல்வியாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

“இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மொழிபெயர்ப்புப் பணிகள் நிறைவடையும். ஆசிரியர்கள், தமக்கான மென்பிரதியை தேசிய கல்வி நிறுவகத்தின் இணையத்தில் இந்த மாத இறுதியில் தரவிறக்க முடியும்” என்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் அதிகாரி தெரிவித்தார்.