பிணை கோரி நளினி மனு தாக்கல்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இருக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாத காலம் பிணை கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அத்துடன், குறித்த மனு மீதான விசாரணைக்கு தானே நேரில் முன்னிலையாக வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்நிலையில், நேரில் முன்னிலையாகி வாதிட அனுமதிக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவுக்கு ஜூன் 11ஆம் திகதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவசரமாக பிணை தேவைப்பட்டால் விடுமுறைகால நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை ஜூன் 11ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.