உடல் முழுவதும் வீர தழும்புகள்…. தைரியத்தின் மொத்த உருவமாக நிற்கும் இளம்பெண்…. யார் அவர்?

கொடிய விலங்குகள் உள்ள காட்டுப்பகுதியை 12 ஆண்டுகளாக பாதுகாத்து வரும் பெண்ணின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்தவர் ரஷீலா வதேர். இவர் கடந்த 12 ஆண்டுகளாக காட்டுப்பகுதியை பாதுகாக்கும் வனத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

பல சவால்களை சந்தித்த பின்னரே இந்த பணியை ரஷீலா தேர்ந்தெடுத்தார்.

அதாவது குஜராத்தில் இருக்கும் கிர் காட்டில், காட்டுப்பூனை துரத்தியதில் சிறுத்தை ஒன்று கிணற்றில் விழுந்துவிட்டது.

பல்வேறு முயற்சிகள் செய்தும் அதை வெளியில் எடுக்க முடியாத நிலையில் யாராவது ஒருவர் கிணற்றுக்குள் இறங்கியே ஆக வேண்டிய சூழல்.

அந்த சிறுத்தையைக் காப்பற்ற கடைசி முயற்சியாகக் கிணற்றுக்குள் தைரியமாக இறங்கினார் பெண் வன காவலரான ரஷீலா வதேர்.

கிணற்றுக்குள் இறங்கி மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையைக் காப்பாற்றினார் ரஷீலா.

ரஷீலா குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில், கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் என இதுவரை 1,000 -க்கும் மேற்பட்ட விலங்குகளைக் காப்பாற்றியுள்ளார்.

2007-ம் ஆண்டு கிர் காட்டைப் பாதுகாக்கும் பணிக்காக 44 பெண் வனக் காவலர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தனர். அதில் ரஷீலாவும் ஒருவராக வேலைக்குச் சேர்ந்தார்.

காட்டைப் பாதுகாக்க பெண் அதிகாரிகள் யாரும் இல்லாததால், இவரே பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை பல்வேறு மிருகங்கள் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட தையல்கள் மற்றும் தழும்புகளை தனது உடம்பில் சுமந்துகொண்டு வீரமங்கையாக தனது பயணத்தை தொடர்கிறார் ரஷீலா.