ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!

இலங்கையில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகவும், அதேவேளை தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுமித்ரயோ அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

மன நல ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வு உதவிகளைச் செய்துவரும் சுமித்ரயோ அமைப்பு அண்மையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. இதன்போதே இத்தகவல் வெளியிடப்பட்டது.

உலகில் அதிகளவானோர் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் 1995ஆம் ஆண்டு இலங்கை முதலிடத்தில் இருந்தது. இதன் பேரில் நடவடிக்கை எடுத்த அப்போதைய அரசாங்கம், தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில் விசேட தேசியக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் மன நலக் கோளாறுகள், மது, போதை மருந்துப் பாவனை மற்றும் ஒத்துழைப்புப் பண்புக் குறைபாடு என்பனவே தற்கொலைகளுக்கான முக்கிய காரணங்கள் என்று கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில் ஜனாதிபதிக்கான சிறப்பு அதிரடிப் படை நடவடிக்கைகளும் எடுத்து வந்தது. அது முதல் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது.

தற்போது தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் போதும், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது அச்சுறுத்துவதாக இருப்பதாக சுமித்ரயோ குறிப்பிட்டுள்ளது.