உயிருக்கும் போராடும் நூற்றுக்கணக்கான மக்கள்! கிளிநொச்சி இளைஞர்களின் மனிதாபிமானம்

இலங்கையில் இன்றைய தினம் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில் காயமடைந்து உயிருக்கும் போராடும் நூற்றுக்கணக்கான மக்களுக்காக கிளிநொச்சி இளைஞர்கள் தாமே முன்வந்து இரத்த தானம் செய்துள்ளனர்.

சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர் மற்றும் யுவதிகள் உட்பட பலர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்று குருதி கொடை வழங்கியுள்ளனர்.

இன்றைய தினம் குண்டு தாக்குதல்களில் காயமடைந்த பெரும்பாலானோருக்கு இரத்தம் வழங்க வேண்டிய தேவை உள்ள போதும் இரத்த வங்கிகளில் இரத்தம் இல்லை என தகவல் வெளியாகியிருந்தது.

இதனால் இரத்த தானம் வழங்கக்கூடியவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளை அணுகி இரத்தம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கிளிநொச்சியில் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இணைந்து தாமாக முன்வந்த இரத்த தானம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இனம், மதம் ஆகிய பாகுபாடுகளை கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு இரத்தம் கொடுத்துள்ளனர் என கொழும்பை சேர்ந்த உஸ்மான் அலிஇ என்பவர் தெரிவித்துள்ளார்.