நேற்றைய கொடூரம் தொடர்பில் சிக்கும் தடயங்கள்!

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் தெமட்டகொட பகுதியில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீட்டில் இருந்து பெண் ஒருவரதும், இரண்டு பெண் குழந்தைகளினதும் உடலங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

விசேட அதிரடிப்படை பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றை அடுத்து தெமட்டகொட பகுதியிலுள்ள சந்தேகத்திற்கு இடமான வீட்டை சுற்றிவளைக்க பொலிசார் முற்பட்டபோது அந்த வீட்டிற்குள் குண்டுகள் வெடித்ததாக தெரிவித்த பொலிசார், அதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்ததாகவும் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்ததக்கது.

கொழும்பு கொச்சிகடை, நீர்கொழும்பு மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து அந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தரப்பினரை கைதுசெய்வதற்காக விசேட அதிரடிப்படை, பொலிசார் மற்றும் இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் தீவிரமான தேடுதல் வேட்டைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய விசேட அதிரடிப்படை பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலொன்றை அடுத்து உள்ளூர் நேரப்படி 1.45 அளவில் பொலிசார் தெமட்டகொட மகாவில பூங்கா பகுதியிலுள்ள வீடொன்றை சுற்றிவளைத்தனர்.

இந்த நிலையில் அங்கு திடீரென இரண்டு குண்டு வெடிப்புக்கள் பதிவாகியுள்ளன. இதன்போது அங்கிருந்த ஒருவர் குண்டை வெடிக்க வைத்துக்கொண்டதாகவும், இதனால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த சம்பவத்திற்கு மத்தியில் குறித்த பகுதியில் மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களுடன் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு எதிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிசொகுசு வாகனமொன்றும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

குறித்த வாகனத்தில் இருந்து நேற்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்கான சினமன்ட் கிறாண்ட் நட்சத்திர ஹோட்டலின் சின்னத்துடன் கூடிய தண்ணீர் போத்தலொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.