தலையை மூடிக்கொண்டு யாழ் ஆலயங்களிற்குள் நுழைய முயன்ற யுவதி யார்?

யாழ் இணுவில் பகுதியில் முக்காடு அணிந்த பெண்ணொருவர் ஆலயத்திற்குள் நுழைய முயன்ற சம்பவம் தொடர்பாக, பிரதேச இளைஞர்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அடுத்தடுத்த இரண்டு ஆலயங்களிற்குள் அந்த யுவதி நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முழு இலங்கையையும் கலங்க வைத்த தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. கிறிஸ்தவ மத தலங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, யாழ்ப்பாணம் இணுவிலில் இருந்து பொலிசாருக்கு ஒரு தகவல் சென்றது.

அந்த தகவல்-

நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் காற்சட்டை, ரீசேட் அணிந்து, தலையை மூடியபடி, கைப்பை கொழுவியபடி வந்த யுவதியொருவர், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்குள் நுழைய முயன்றார்.

அவரது தோற்றத்தை அவதானித்த ஆலய பூசகர், அவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் எனக் கருதி, அவரை ஆலயத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தார்.

எனினும், யுவதி ஆலயத்திற்குள் நுழையப் போகிறேன் என அடம்பிடித்தார். இதை அவதானித்த இளைஞர்கள் அங்கு ஒன்று சேர, யுவதி சிறிது நேரம் தர்க்கித்து விட்டு, அதற்கு அருகில் உள்ள இணுவில் பரராசசேகரப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றார்.

அங்கும் யுவதியை உள்ளே நுழைய விடாமல் தடுக்க, மருதனார்மடம் ஆஞ்சனேயர் பெருமாள் கோயில் எங்கிருக்கிறதென அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார்.

அந்த யுவதியை அங்கிருந்து அனுப்பினால் போதுமென்ற நோக்கத்துடன், அந்த ஆலயங்களின் அமைவிடத்தை கூறி இளைஞர்கள் அனுப்பி வைத்தனர்.

நேற்றைய தற்கொலை தாக்குதல்களையடுத்து, அதற்கு முதல்நாள் சம்பவத்தால் சந்தேகம் அடைந்த இளைஞர்கள் இது குறித்து பொலிசாருக்கு அறிவித்தனர்.

பொலிசார் தற்போது, சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து, அந்த பெண் தொடர்பான விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.