தாக்குதலுக்கு முன்பே அனைத்தையும் அறிக்கையாக வெளியிட்ட புலனாய்வுப் பிரிவு! அதிர்ச்சி தகவல் அம்பலம்

சிறிலங்காவில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற உள்ளது என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இது தொடர்பில் நடக்கவிருக்கும் அனைத்தையும் குறிப்பிட்டு ஒரு அதிர்ச்சி அறிக்கை மூலம் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் பொலிஸ்மா அதிபர் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விசனம் வெளியிட்டுள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டு தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

தௌஹீத் ஜமாத் தலைவர்களான ஷரான் ஹஷ்மி, ஜல்ஹால் ஹிடால், சஜிட் மௌலவி, ஷல்ஹான், ஆகியோர் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதற்காக சிறிலங்கா வந்துள்ளனர் என்றும் அவர் தகவல் தெரிவித்திருந்தார்.

48 மணி நேரத்துக்கு முன்னதாகவும், தாக்குதல்கள் நடப்பதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவும் கூட உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

குறிப்பாக, கிறிஸ்தவ, கத்தோலிக்க தேவாலயங்கள், விடுதிகள் இலக்கு வைக்கப்படலாம் என்றும் அந்த புலனாய்வுத் தகவல்கள் எச்சரித்திருந்தன.

ஆனால் இது குறித்து பிரதமருக்கோ அல்லது பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் கூட தெரியப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டும், அதில் அக்கறை செலுத்தாத காவல்துறை மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

அரசாங்கம் இந்தச் சம்பவங்களுக்கான பொறுப்பை தட்டிக் கழிக்கவில்லை. இதற்காக மன்னிப்புக் கோருகிறது. என ராஜித குறிப்பிட்டுள்ளார்.