இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார் இவர்கள்?

கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன.

இதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் சிலரும், ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஏற்கனவே புலனாய்வுத்துறை, இந்த அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்ததாக இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ ட்விட்டரில் ஒரு ஆவணத்தை ஏப்ரல் 21ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.

அப்படியொரு கடிதம் வந்தது உண்மைதான் என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ரஜித செனரத்ன குறிப்பிட்டார்.

ஆனால், இத்தாக்குதல்களை நடத்தியது என்டிஜே அமைப்புதான் என்று இலங்கை அரசு அறிவிக்கவில்லை அல்லது இதுகுறித்த எந்த விளக்கத்தையும் அந்த அமைப்பும் இதுவரை தரவில்லை.

எனினும் இத்தாக்குதல் தொடர்பாக 24 நபர்களை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர்கள் என்டிஜே அமைப்பை சேர்ந்தவர்களா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

முக்கிய வாதங்கள்
என்டிஜே குறித்து குறைவான தகவல்களே தெரிய வருகிறது. இதற்கு மத்தியில் இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பையும், இந்தியாவில் தமிழகத்தில் இயங்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பையும் சிலர் குழப்பி கொண்டனர்.

தவ்ஹீத் ஜமாத் பெயரையும் ஊடகங்கள் தவறாக உச்சரித்தன. தவ்ஹீத் என்றால் அல்லாவே ஓர் இறை என்பதாகும், ஜமாத் என்றால் அரபியில் குழு என்று அர்த்தம்.

இந்திய ஊடகங்களான அமர் உஜாலா, சிஎன்என் நியூஸ் 18 மற்றும் ஜீ நியூஸ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக எழுதின. ஆனால், இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இலங்கையிலும் அமைப்பின் கிளை இருப்பதாக தமது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதன் பெயர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத். என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இல்லை.

ஃபெர்னாண்டோ ஓர் உளவுத்துறையின் கடிதத்தை பகிர்ந்து இருந்தார், அந்த கடிதத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் என முகமது காசில் முகமது ஜக்ரான் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் உண்மைதன்மையை பிபிசியால் பரிசோதனை செய்ய இயலவில்லை.

என்டிஜே ஃபேஸ்புக் பக்கத்தில் பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பகிரப்பட்டுள்ளன. அவர்கள் இலங்கையின் வட பகுதி மக்களை குறி வைத்து இயங்குவதாகவே தெரிகிறது. அதாவது ரத்த தானம் செய்வது, ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் விநியோகிப்பதென அவர்கள் இயங்குகிறார்கள்.

ஆனால், அதே நேரம் முகமது ஜக்ரானின் காணொளியும் அதில் உள்ளது.

ஆனால், அந்த அமைப்பின் ட்விட்டர் கணக்கு மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை. அதாவது எந்த இடுகையும் பகிரவில்லை.

மற்றவர்கள் கூறுவது என்ன?
அதிகாரிகளோ அல்லது ஊடகங்களோ என்டிஜே குறித்து குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.

புலனாய்வு கடிதத்தில் இந்த அமைப்பின் பெயர் இருப்பது இந்திய ஊடகங்களும், இலங்கை அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டவே பயன்படுத்தப்படுகிறது. இது இலங்கை அரசாங்கத்தினுள்ளும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக இந்திய புலனாய்வு தகவல் தெரிவித்திருந்ததாக இந்திய செய்தித்தாளான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த இந்திய புலனாய்வு எச்சரிக்கையில் என்டிஜே அமைப்பின் பெயர் இருந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தாக்குதல் குறித்து ஏற்கனவே புலனாய்வு தகவல்கள் “சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு” வந்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், அது தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக்கோ யாரும் சுட்டிக்காட்டவில்லை என்று குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்கே, இந்திய புலனாய்வு தகவல்களை குறிப்பிடுகிறாரா அல்லது வேறெதும் எச்சரிக்கை வந்ததை குறிப்பிட்டாரா என்று தெளிவாக தெரியவில்லை.

ஆனால், இலங்கை அரசின் புலனாய்வு கடிதத்தை ட்வீட் செய்திருந்த ஃபெர்ணான்டோ, பத்து நாட்களுக்கு முன்பாகவே இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்திருந்தார்.

பாதுகாப்புத்துறை தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்டுப்பாட்டில் இருப்பதால், புலனாய்வு கடிதத்தை ரணில் மற்றும் அவரது அமைச்சர்கள் ரகசியமாக வைத்திருந்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் செனரத்ன கூறினார்.

கடந்தாண்டு இறுதியில் இருந்தே இலங்கையில் பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே சிறந்த உறவு இருக்கவில்லை.

செனரத்னவின் கருத்துகளுக்கு சிறிசேன இன்னும் எதுவும் கூறவில்லை.

உள்ளூர் குழுவின் வேலையாக மட்டும் இத்தாக்குதல்கள் இருக்காது என்றும் இதில் சர்வதேச குழுக்களின் தொடர்பு இருப்பதாகவும் அரசாங்கம் நம்புகிறது என்றும் செனரத்ன மேலும் கூறினார்.

– BBC – Tamil