தற்கொலைத்தாக்குதலை நேரடியாக பார்த்த ஒரு தாயின் கணப்பொழுது எப்படி இருந்தது?

“விண்ணதிரும் வெடிச் சத்தம் கேட்டவுடனேயே மரண ஓலத்தோடு மக்கள் பதறி ஓடியதையும் ஆங்காங்கே கை-கால்கள், உடல்பாகங்கள் எனச் சிதறிக் கிடந்ததையும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். கயவர்களின் வெறியாட்டத்தால் இந்தப் புனித பூமி இரத்த பூமியாகிவிட்டது” என கட்டுவபிட்டிய புனித செபஸ்தியன் தேவாலய குண்டுவெடிப்பை நேரடியாகப் பார்த்த தந்திகா ரமணி டி சில்வா (67) என்ற வயோதிப தாய் தெரிவித்தார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோர் சிலரின் இறுதிக் கிரியைகளுக்கான பிரார்த்தனைகள் புனித செபஸ்தியன் தேவாலய வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றன. உயிரிழந்தோரின் சடலங்கள் அங்கு கொண்டுவரப்படும் சந்தர்ப்பங்களில் கண்ணீர்க் குரல்களுக்கு மத்தியில் கதறியழுதுகொண்டிருந்த தந்திகா ரமணி மேற்கண்டவாறு தெரிவித்தார். துப்புரவுத் தொழிலாளியாக, தேவாலயத்திலேயே தங்கியிருந்து தொழில்புரிந்துவரும் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்.

தேவாலயத்தில் கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவங்களை அவர் விபரிக்கிறார்

“அன்றைய ஜெபப் பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அவர்களில் பலர் வெளி வளாகத்தில் நின்றிருந்தனர். நான் தேவாலயத்தின் பின் பகுதியிலிருந்து மெழுகுதிரிகள் பலவற்றை எடுத்துக்கொண்டு வந்தேன்.

அப்போது விண்ணதிரும் பெரும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்பதை என்னால் ஊகித்துக்கொள்ள முடியவில்லை.

அடுத்த செக்கனில் பொதுமக்கள் வீசப்பட்டு விழுவதையும் உடற்பாகங்கள் சிதறித் தெறிப்பதையும் கண்டேன். மக்கள் மரண ஓலத்தோடு அங்குமிங்கும் ஓடினார்கள். என்னால் அடுத்த அடியை எடுத்து வைக்கமுடியவில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் நின்றிருந்தேன். வயதான அம்மா ஒருவர் என்னை நோக்கித் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார்… அவருடைய கால்கள் துண்டாகியிருந்தன. நான் தண்ணீர் எடுப்பதற்காக ஓடினேன்… அவசரமாகக் கொண்டு வரும்போது அவர் நிலத்தில் சரிந்திருந்தார்.

அதன்பிறகு பலர் அங்கு கூடிவிட்டார்கள். நான் அப்படியே சுவரோரம் சாய்ந்துவிட்டேன். இன்னும் அந்த அதிர்ச்சி என்னை ஆட்டிப்படைக்கிறது” என்றார்.