அவசரகால சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்த அனுமதியில்லை

அவசரகால சட்டங்களை சாதாரண மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டங்கள் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அந்தப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்ட இலங்கையில் உள்ள தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், ஐ.நா. மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வதிவிடப் பிரதிநிதிகள், ஏனைய சர்வதேச முகவர் அமைப்புக்களின் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறினார்.

நேற்றிரவு அமுலுக்கு கொண்டு வரப்பட்ட அவசரகால சட்ட அதிகாரங்களையும் பாதுகாப்பு படையினர் தற்போது பயன்படுத்திக்கொள்ள முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்புத் துறையை மீள ஒழுங்குப்படுத்தல் மற்றும் வெளிநாட்டு நிபுணத்துவ உதவியைக் கொண்டு பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துக்கட்ட முடியுமென்று தான் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது வலியுறுத்திக் கூறினார்.

இதனிடையே, சமூக ஊடகங்கள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.