குண்டு வெடிப்பு தாக்குதல்கள் – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் உயிரிந்தோரின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.

காவல்துறை இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சரச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்ளும் வகையில், இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றமை தொடர்பில், தமது நாட்டு புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைக்கவில்லை என நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

நியூஸிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டொன் இதனைத் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தின் க்ரைஸ்ச்சர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இலங்கையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன நேற்று நாடாளுமனறில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நியூஸிலாந்து பிரதமர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இலங்கையின் விசாரணைகள் தற்போது ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது என்பதை தான் புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்னதாக, அது குறித்து இந்திய புலனாய்வு துறையினர், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டது எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் என்.டீ.ரி.வி ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், இலங்கை தரப்பினரை தொடர்பு கொண்ட இந்திய புலனாய்வு பிரிவினர், இந்த விடயத்தை அறியப்படுத்தி இருந்தனர் என இரண்டு நாடுகளின் பாதுகாப்புத் துறை தகவல்களை மேற்கோள்காட்டி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், கடந்த சனிக்கிழமை இரவும், இந்தியத் தரப்பினரால், ஒரு முன் எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டிருந்தது என இலங்கை தரப்பு தகவலொன்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் மாதம் 4 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளிலும், குறித்த விடயம் தொடர்பான தகவல்கள் இந்திய புலனாய்வு பிரிவினரால், இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்தாகவும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விடயங்கள் தொடர்பில், இலங்கை, இந்திய அரச தரப்பில் எவ்வித உத்தியோகபூர்வ பதில்களும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.