குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.

அவ்வகையில், 10 பேரில் 9 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

இதில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவக்குமார், கே.ஜி.ஹனுமந்ராயப்பா, கே.எம்.லஷ்மி நாராயணா, எம்.ரங்கப்பா, வி.துளசி ராம், ஏ.மேரெகவுடா, எச்.புட்டராஜூ மற்றும் ஆர்.லக்ஷண் கவுடா ஆகிய 9 பேரின் பட்டியலை இந்தியத் தூதரகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

உயிரிழந்தோரின் உடல்கள் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.