சிறிலங்காவில் அரங்கேறிய கொடூரம்! கொதித்தெழுந்த ஈழ அகதிகள்

சிறிலங்காவில் அரங்கேறிய கொடூரமான தற்கொலை குண்டு தாக்குதலானது தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனரும், தந்தை செல்வாவின் புதல்வருமான எஸ்.சீ.சந்திரசேகரன் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இயல்பான வாழ்க்கை முறைமையில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் 2,815 அகதிகள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஈழ அகதிகள் தெரிவிக்கையில்,

“இலங்கையில் சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் எட்டு இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பு, 321 பேர் உயிரிழப்பு என சிங்களர்கள், தமிழர்கள் மட்டுமன்றி இந்தியாவுக்கு அந்த நாட்டிலிருந்து அகதிகளாக வந்து வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் என மூன்று தரப்பையும் மீண்டும் நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.

இங்குள்ள அகதிகளாகிய நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த நாடான இலங்கைக்கே சென்றுவிடலாம் எனக் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து வைக்கும் அகதிகள் எல்லோரையும் முடக்கிப் போட்டிருக்கிறது இந்த வெடிகுண்டு தாக்குதல்கள்.

மட்டக்களப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் புழல் அகதிகள் முகாமில் உள்ள ஒரு பெண்ணின் சகோதரி இறந்து போயிருக்கிறார்.

அவர், தன் தங்கையிடம் ‘எப்படியாவது நீ மீண்டும் இலங்கை வருவதற்கு உனக்காக நான் ஜெபிக்கப்போகிறேன்’ எனச் சொல்லி, ஈஸ்டர் தினத்தன்று தேவாலயத்துக்குச் சென்றார்.

ஆனால், அவருடைய சிதைந்த உடலைத்தான் தங்கையால் பார்க்க முடிந்தது.

எங்களுக்கு மட்டும் நிம்மதி என்பதே இருக்காதா, எங்கள் சொந்த நாட்டுக்கு நாங்கள் திரும்பவே முடியாதா, காலம் முழுக்க உறவினர்களையும் எங்கள் மண்ணையும் இழந்து நாங்கள் அழுதுகொண்டிருக்கத்தான் வேண்டுமா?

இப்போதைய நிலையில் அங்கு சென்றாலும் அகதிகளாக வாழ வேண்டிய சூழல்தான் இருக்கும்.

தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட பிறகு சொந்தங்களிடம் அலைபேசியில் நலம் விசாரிக்க முடிவதால், ஆளுக்கொரு நாட்டில் இருந்தாலும் ஏதோ உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என நாங்கள் இங்கேயும், அவர்கள் அங்கேயும் காலத்தைக் கழித்துவந்தோம்.

ஆனால், இப்போது இலங்கையில் நடந்துள்ள குண்டுவெடிப்புச் சம்பவம், எங்களுடைய தற்காலிக நிம்மதியையும் கெடுத்துவிட்டது” என குமுறியுள்ளனர் இலங்கை அகதிகள்…