தற்கொலை குண்டுதாரிக்கு அமைச்சர் ரிசாட் செய்த உதவிகள் ஆதாரத்துடன் அம்பலம்

கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இன்சாப் அஹமட், இராணுவத்தில் இருந்து அகற்றப்படும் வெற்று துப்பாக்கி ரவை கோதுகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொண்டுள்ளாரென்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவரது செப்புத் தொழிற்சாலையில் மீள்சுழற்சி செய்வதற்காக ரவைக் கோதுகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

ரவைக் கோதுகளை கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக இன்சாப் அஹமட் கொள்வனவுச் செய்வதற்கு, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைத்தொழில் அபிவிருத்தி சபை, ரிசாட் பதியுதீனின் கீழுள்ள வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.

வர்த்தகர் ஒருவர் என்ற அடிப்படையில், கைத்தொழில் அபிவிருத்தி சபையில் தம்மை அவர் பதிவுசெய்துள்ளார்.

இதற்கமைய, கொலோசஸ் பிரைவட் லிமிட்டட், இல.111/6, அவிசாவளை வீதி, வெல்லம்பிட்டி என்ற முகவரியில், 1611216 பதிவு இலக்கத்தில் எம்.ஐ.இன்சாப் என்ற பெயரில் இதற்கான பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல வருடங்களாக இவர் வெற்று ரவைக் கோதுகளை கொள்வனவுச் செய்து வந்துள்ளதுடன், செப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தமது தொழிற்சாலைக்கு இதனை கொள்வனவு செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களிற்கான வெடிகுண்டுகள், இந்த வெல்லம்பிட்டி செப்பு தொழில்சாலையில் தயாரிக்கப்ட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவு கருதுகிறது.