காத்தான்குடியில் தொடங்கிய ஓட்டம் சாய்ந்தமருதில் முடிந்தது!… தற்கொலை குழு பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்!

சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதி வீடொன்றில் பதுங்கியிருந்தபோது, நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் எஞ்சியிருந்த நபர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

சாய்ந்தமருதில் அருகருகான இரண்டு வீடுகளில் பதுங்கியிருந்த குழுவே கொல்லப்பட்டுள்ளது.

இந்தகுழு எப்படி சிக்கியது என்பது குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் தற்கொலை தாக்குதலை தொடர்ந்து, இந்த குழுவுடன் நெருக்கமாக செயற்பட்ட பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வெல்லம்பிட்டிய தொழிற்சாலை கணக்காளர் தாக்குதல் நடந்த அன்று, இந்த பிரதேசங்களிற்கு காரில் வந்து சென்றிருந்தார்.

அவரும் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்கள் அனைவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிழக்கில் இந்த அமைப்பின் மையம் செயற்படுவது தெரிந்தது.

சஹ்ரானின் வாகன சாரதி நேற்று முன்தினம் காத்தான்குடியில் கைதானார். இப்படி இந்த வலையமைப்பின் முக்கிய புள்ளிகள் கைதாகிய நிலையில், சம்மாந்துறையில் ஒரு பதுங்குமிடம் இருக்கும் தகவல் பொலிசாரிற்கு கிடைத்தது. இதன்படி நேற்று முன்தினம் மாலை அங்கு சோதனை நடத்தினர்.

நேற்றும் சம்மாந்துறையில் தேடுதல் நடத்தப்பட்டது. அதில் ஏழு பேர் கைதாகினர். அதில் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நிந்தவூரில் இருக்கும் வீடு ஒன்று பற்றிய தகவல் பொலிசாரிற்கு கிடைத்தது. இதன்படி நேற்று அங்கும் தேடுதல் நடத்தப்பட்டது.

சம்மாந்துறையில் 7 பேர் கைதானதும், நிந்தவூரில் பதுங்கியிருந்த இந்த குழு, நேற்று வடி வாகனம் ஒன்றில் சாய்ந்தமருதிற்கு வந்தார்கள்.

இவர்கள் ஏற்கனவே காத்தான்குடியில் பதுங்கியிருந்து, அங்கு தேடுதல்கள் தீவிரப்படுத்த நிந்தவூர் சென்று, இறுதியில் சாய்ந்தமருதை வந்தடைந்துள்ளனர்.

நிந்தவூர் வீடு, சாய்ந்தமருது வீடு இரண்டையும் காத்தான்குடியை சேர்ந்த மொஹமட் நிவாஸ் (1982இல் பிறந்தவர்) என்பவரின் பெயரில் வாடகைக்கு பெற்றுள்ளனர்.

ஒரு குடும்பம் தங்குவார்கள் என்றே, சாய்ந்தமருது வீடு பெற்றப்பட்டது. காத்தான்குடியை சேர்ந்த மொஹமட் நிவாஸ், சாய்ந்தமருது வீட்டுக்குள் உயிரிழந்து விட்டார். கையில் துப்பாக்கியுடன் வீடியோவில் பேசிய நபர் அவர்தான்.

50,000 ரூபா முற்பணம், மாதாந்தம் 5,000 வாடகைப்படியே நிந்தவூர், சாய்ந்தமருது வீடுகள் பெறப்பட்டன.

எனினும், 19 பேர் வந்திறங்கிய போது, வீட்டு உரிமையாளர் குழப்பமடைந்துள்ளார். அந்த குழுவின் மீது அயலவர்களிற்கும் சந்தேகம் எழ, நேற்று மாலை பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். பள்ளி நிர்வாகம் கிராமசேவகரிடம் முறையிட்டனர்.

இதற்குள் பண்டாரவளையை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அங்கு போக்குவரத்து பொலிசாக உள்ளார்.

அவர் உள்ளூர்வாசிகளுடன் நெருக்கமாக பழகுவார். அவரிடம் சில இளைஞர்கள் நேற்று மாலை, புதியவர்கள் குடிவந்த தகவலை தெரிவித்தனர்.

நேற்று மாலை, சாய்ந்தமருது வீட்டுக்கு போக்குவரத்து பொலிஸ்காரர் சென்றார். தமது வீட்டுக்கு பொலிஸ்காரர் வருவதை பார்த்ததும், பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு விட்டோம் என நினைத்து, அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

அதிர்ஷ்டவசமாக பொலிஸ்காரர் மீது சூடு படவில்லை. அருகிலிருந்து கால்வாய்க்குள் விழுந்து தப்பியோடி வந்து விட்டார். இதனால் சிறிய சிராய்ப்பு காயங்களிற்கு உள்ளானார்.

இனிமேல் தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அந்த குழுவிலிருந்த சில ஆண்கள் வீட்டிற்கு வெளியில் வந்து, பணமூட்டையை விரித்து, 5000 ரூபா நாணயத்தாள்களை எடுத்து காற்றில் வீசியெறிந்து, அயலவர்களை திட்டியுள்ளார்.

“அடே காட்டிக் கொடுத்தவனுகளே… இந்த காச சப்புங்கடா… உங்களுக்காகத்தானே சாகப்போறம்“ என அவர் கத்தியுள்ளார்.

பின்னர் இராணுவத்தினர் வீட்டை சுற்றிவளைக்க, மோதல் ஆரம்பித்தது. இரவு 7 மணியளவில் வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலையை ஆரம்பித்துள்ளனர்.

இதில் 6 குழந்தைகள், 6 ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்தனர்.

தாக்குதல் ஆரம்பித்த வேளையில், அந்த வீதியால் முச்சக்கரவண்டியில் பயணித்த பாத்திமா அஸ்ரிபா (21) என்ற பெண்ணும் உயிரிழந்தார். முச்சக்கர வண்டியை செலுத்திய அவரது கணவர் காயமடைந்துள்ளார்.