தமிழர் என்று நினைத்து சிங்களவர்மீது தாக்குதல்; அதிகாலை நடந்த சம்பவம்!

தமிழர் என்று நினைத்து சிங்கள ஆண் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

பின்னர் குறித்த ஆண் ஒரு சிங்களவர் என்பதைத் தெரிந்துகொண்ட குறித்த மர்மிகள் அவரை கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர் சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய ஆய்வாளர் த்யாகி ருவன்பதிரனவின் கணவர் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து த்யாகி தனது டுவிட்டர் தளத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

”எனது கணவர் இரவு நேரம் வெளியில் சென்றுவிட்டு நேற்று அதிகாலை Uber எனப்படும் வாடகைக் கார் சேவையில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர் காரிலிருந்து இறங்கி எமது வீட்டுக்கான பாதையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த நான்கு அல்லது ஐந்துபேரைக்கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அவரிடம் அவர்கள் அடையாள அட்டை கேட்டனர். ஆனாலும் முதலில் கணவர் அதனைக் காட்ட மறுத்ததனால் அவரை குறித்த நபர்கள் சூழ்ந்துகொண்டனர்.

இதன்பின்னர் கணவர் தனது அடையாள அட்டையைக் கொடுத்தபோது அதில் தமிழிலும் சிங்களத்திலும் எழுதப்பட்டிருந்த கணவரின் பெயரைப் பார்த்துவிட்டு அவர் தமிழர் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து “எனது பெயரை உச்சரித்தால் தமிழ் போலவா தெரிகிறது?” என கணவர் கேள்வியெழுப்பியுள்ளார். இதன்போது அவர்களில் ஒருவர் எனது கணவரைத் தாக்கியுள்ளார். பின்னர் கணவர் ஒரு தமிழர் இல்லை சிங்களவர்தான் என்பதைத் தெரிந்துகொண்ட அவர்கள் அவ்விடத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.” என்று தனது டுவிட்டர் தளத்தில் த்யாகி கூறியுள்ளார்.

இதேவேளை, “எனது கணவர் ஒரு தமிழராகவோ அல்லது முஸ்லிமாகவோ இருந்திருந்தால் அந்த நபர்கள் என்ன செய்திருப்பார்கள்?” என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுளார்.

எனினும் இதுகுறித்து பொலிஸாரிடம் தாம் முறைப்பாடொன்றைப் பதிந்துகொண்டதாக கூறியுள்ள த்யாகி, சம்பவம் இடம்பெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி பதிவினை வைத்து சம்மந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதற்கான முயற்சியில் பொலிஸார் இறங்கியுள்ளதாக மேலும் கூறியுள்ளார்.