யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கேட்ட இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தெற்கு கொத்தத்துறைப் பகுதியில் இன்று மதியம் இரண்டு குண்டுகள் சிறிலங்காப் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளன.

மதியம் ஒரு மணியளவில் குறித்த பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதால் கொத்ததுறையை அண்மித்த பகுதிகளான வட்டுக்கோட்டை, மூளாய், பொன்னாலை, அராலி ஆகியவற்றில் சிறிது நேரம் பதற்றம் நிலவியதாக எமது பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பாடசாலையிலிருந்து மாணவர்கள் வெளியேறுகின்ற நேரத்தை அண்மித்த பொழுதில் இந்த குண்டுச் சத்தங்கள் கேட்டதனால் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பிய பெற்றோர் மத்தியில் சற்று கொந்தளிப்பு நிலை காணப்பட்டது.

எவ்வாறாயினும் உடனடியாக பாடசாலைகளுக்குச் சென்ற பெற்றோர் சம்பவம் என்னவென்று அறியாமல் தமது பிள்ளைகளை அவசரமாக வீடுகளுக்கு கூட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை கொத்தத்துறை சவாரித்திடல் மற்றும் மயானத்தினை அண்மித்த வெளிகொண்ட பகுதியில் குறித்த குண்டுகள் படையினரால் வெடிக்கவைக்கப்பட்டதாக பிந்திக் கிடைத்த தகவல் கூறுகின்றது.

வழமையாக ஞாயிற்றுக் கிழமைகளில் கல்லுண்டாய் கடற்கரை வெளியில் பாவனைக்குதவாத குண்டுகளை வெடிக்கவைக்கும் சிறிலங்காப் படையினர் இன்று கொத்தத்துறை வெளியில் வெடிக்கவைத்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கல்லுண்டாய் வெளியில் தற்பொழுது வீட்டுத் திட்டப் பணிகள் இடம்பெற்றுவருவதனாலேயே இவ்வாறு கொத்தத்துறையில் வெடிக்கவைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் முற்கூட்டிய அறிவிப்புக்கள் எதுவுமின்றி புதிதாக ஓரிடத்தில் இந்த குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டதாக பிரதேச மக்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.