அரசாங்கத்தின் செல்லக்குழந்தைகளாக இருந்த முஸ்லிம்களின் நிலை இதுதான்!

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது இன்று தமிழ் மக்களின் கைகளிலேயோ அல்லது முஸ்லிம் மக்களின் கைகளிலிலேயோ தற்போது இல்லை.

அது அவர்களின் கைகளில் இருந்து விடுபட்டு போய்விட்டது. தற்போது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது சிங்கள அரசின் கைகளுக்கு சென்று விட்டது” என வடகிழக்கு இணைந்த மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “அண்மையில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல் காரணமாக முஸ்லிம் மக்கள் பழிச் சொல்லுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த பழிச்சொல்லில் இருந்து நாம் இலகுவாக மீண்டு வரமுடியாது. இது இன்னும் பல்வேறு பரிமாணங்களில் இந்த பழிச் சொல் தொடரும்.

இவ்வளவு காலமும் சைவமும் தமிழும் என்று பேசி வந்த கிழக்கு மாகாணத்தில் தற்போது இந்துத்துவம் பேசுகின்ற அளவிற்கு மாறிப்போயுள்ளது. தமிழ் இளைஞர்களும் தங்களது நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையின் காரணமாக கை கட்டி, வாய்ப் பொத்திக்கொண்டு இருந்து போக வேண்டியதுதான். விடுதலைப் புலிகள் குண்டு வைத்தார்கள் என்றால் அதில் ஒரு இலக்கு, நோக்கம் இருந்தது.

தற்போது எந்த நோக்கத்திற்காக குண்டு வைக்கப்பட்டது. இது ஏன் வைக்கப்பட்டது. என்ன காரணம்? எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், அந்த அரசாங்கத்தின் செல்லக்குழந்தைகளாக முஸ்லிம்கள் இருந்தார்கள்.

எனினும், அந்த நிலைமை தற்போது முற்றிலும் மாறிப்போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.