யாழ். மாநகர மக்களுக்கான பொது அறிவித்தல்

யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் குடியிருப்பாளர்களின் வீட்டுத் திண்மக்கழிவகற்றல் செயற்பாடு தொடர்பில் யாழ். மாநகரசபையினால் புதிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்.மாநகர சபை முதல்வர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய திண்மக்கழிவகற்றல் பொறிமுறையை முறையாக ஒழுங்குபடுத்தும் வகையில் இத்திட்டம் எதிர்வரும் 2019.05.27ஆம் திகதி திங்கட்கிழமை மாநகரசபை வளாக முன்றலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

இத் திட்டத்திற்கமைய யாழ் மாநகரின் தூய்மை, துர்நாற்றம் அற்ற சூழல் என்பவற்றை உருவாக்கும் பொருட்டு இரண்டு முறைமையில் இப்பொறிமுறை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதாவது முதலாவது பொறிமுறைமையானது

சமையலறைக்கழிவுகளால் சூழலில் ஏற்படும் தாக்கங்கள், துர்நாற்றங்களை தினமும் அதிகாலையிலேயே அகற்றி மாநகரினதும், குடியிருப்பு பிரதேசங்களினதும் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதாகும்.

அந்தவகையில் 2019.05.27 திகதி முதல் விசேட இசையொன்று ஒலித்துக்கொண்டு காலை 5.30 மணி முதல் மாநகரசபையின் கழிவுகாவும் வண்டிகள் தங்கள் பகுதிகளில் கொண்டுவரப்பட்டு தங்கள் வீடுகளில் உள்ள சமையலறைக்கழிவுகள் மாத்திரமே எமது ஊழியர்களால் எடுத்துக்கொள்ளப்படும். ஏனைய வீட்டுக்கழிவுகள், குப்பைகள் இரண்டாவது பொறிமுறை அமுலுக்கு வரும் வரை வழமையான திண்மக்கழிவகற்றல் முறை மூலம் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றேன்.

மேலும் சமயலறைக் கழிவுகளை வழங்கும் போது அதனுள் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிக்கழிவுகளை போடாது குறிப்பாக உக்கக்கூடிய சமையலறைக்கழிவுகளை மாத்திரம் போடுமாறும், அவ்வாறு சமயலறைக்கழிவுகள் தவிர ஏனைய கழிவுகள் போடப்பட்டால் உரியவர்கள் மீது தண்டப்பணத்துடன் கூடிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

எனவே மேற்குறித்த மாநகரின் தீர்மானத்தை தங்களின் முழுமையான கவனத்திற்கு எடுத்து மாநகரசபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி சுத்தமான பசுமை மாநகரை உருவாக்கும் எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மாநகர மக்களை கேட்டுக்கொள்கின்றேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.