முஸ்லிம் திருமண விவகாரத்தில் வந்தது ஆப்பு! அடுத்தடுத்து என்னென்னவோ?

முஸ்லிம்களின் திருமணம் மற்றும் விவகாரத்துச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் தயாராகி வருகிறது.

குறிப்பாக முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் வயதை 18 வயதுக்கும் மேல் அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளை நேற்று சந்தித்த போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

நாட்டிற்குள் நிரந்தரமாக அமைதியை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் முற்போக்கான பல தீர்மானங்களை எடுத்துள்ளது. முஸ்லிம்களின் திருமண சட்டம் தொடர்பாக நாட்டில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டு வருகிறது.

முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் தனியான சட்டம் அவசியமில்லை. குறிப்பாக சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்வது தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்வதை நியாயப்படுத்தும் தவ்ஹித் ஜமாத் என்ற பெயரில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கு சாதாரண மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

முஸ்லிம்கள் திருமணம் செய்வது மற்றும் விவாகரத்து செய்வது என்பன நாட்டின் சாதாரண சட்டத்திற்கு அமைய நடைபெற வேண்டும்.

இது சம்பந்தமான சட்டத்திருத்தங்களை செய்ய எமது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதனை தவிர சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கும் இஸ்லாமிய அறநெறி பாடசாலைகள் மற்றும் அரபு பாடசாலைகள் சம்பந்தமாக அரசாங்கம் துரிதமான தீர்மானத்தை எடுக்கும்.

இந்த பாடசாலைகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.