புதிய கடற்படைத் தளபதியாக எஸ்.எஸ்.ரணசிங்க நியமனம்

2 மாதங்களே தளபதியாக சேவையாற்றி ஓய்வு பெறுகிறார் ட்ராவிஸ் சின்னையா

புதிய கடற்படைத் தளபதியாக எஸ்.எஸ்.ரணசிங்க நியமனம்

புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் இன்று வழங்கப்பட்டது. அவர் நியமனம் நாளை நடைமுறைக்கு வருகின்றது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவின் பதவிக்காலம் நாளை வியாழக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில் புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 26ஆம் திகதியுடன் 55 வயதை அவர் நிறைவு செய்தார். அவருக்கு ஒரு மாதகால பதவி நீடிப்பையே ஜனாதிபதி வழங்கியிருந்தார். இதனால் அவர் நாளை ஓய்வு பெறுகிறார். அதன்படி, மிகவும் குறுகிய காலத்துக்கு (65 நாள்கள்) நாட்டின் கடற் படைத் தளபதியாக பதவி வகித்தவர் என ட்ரவிஸ் சின்னையா இடம்பிடிக்கிறார்.
1973ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடற்படைத் தளபதிகளாக இருந்த அனைவருமே, ஓய்வு வயது நிறைவடைந்தும் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இந்தப் பதவியில் இருந்துள்ளனர். எனினும் தமிழரான ட்ராவிஸ் சின்னையாவுக்கு ஒரு ஆண்டு பதிவி நீடிப்பை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள் சிலர் கடுமையாக எதிர்க்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. அதனாலேயே ட்ராவிஸ் சின்னையாவுக்கு ஒரு மாதகால சேவை நீடிப்பை வழங்கினார் என்றும் கூறப்பட்டது.
மேலும் ட்ராவிஸ் சின்னையாவுக்கு அதிகாரபூர்வ இல்லமோ, வாகனங்களோ வழங்கப்படடிருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, புதிய கடற்படைத் தளபதியான ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க கடற்படையின் மூத்த அதிகாரி என்பதுடன், பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சால் தெரிவிக்கப்பட்டது.