தீவிரமடைந்த வன்முறைகள்! தமிழ் இளைஞர்களின் அதிரடி நடவடிக்கை

இலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் 120 பாடசாலை மாணவர்கள் அம்பாறை தமிழ் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் இருந்த 120 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சீமெந்து கொள்கலனில் ஏற்றி பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை அம்பாறை, கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் ஈடுபட்டதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு, அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை பிரதேசங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் பேருந்துகள் மீது கற் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.கே.எம்.தமிழ் வித்தியாலயம், நாவலர் தமிழ் வித்தியாலயம், கல்முனை வெஸ்லி வித்தியாலயம் மற்றும் மேலும் சில பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீட்டிற்கு செல்வதற்கு பேருந்துகள் இன்றி தவித்தனர்.

அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த தமிழ் இளைஞர்கள் ஐவர் அடங்கிய குழுவினர் கொள்கலன் ஒன்றை கொண்டு வந்து இந்த மாணவர்களை பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளனர்.

நேற்று காலை 5 மணியளவில் அம்பாறை, மரதமுனை, சம்மாந்துறை, அக்கறைப்பற்று, அட்டாளைச்சேனை, கல்முனை உட்பட பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்களை சுற்றிவளைத்து டயர் எரித்து கலகக் குழுக்கள் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் 8 பேருந்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை பதிவு செய்ய சென்ற தமிழ் ஊடகவியலாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போது பொலிஸார் அவரை காப்பாற்றினர் என ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.