இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு

இலங்கையில் கடந்த ஓராண்டாக புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு, புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இலங்கையின் கண்டியில் இடம்பெற்ற இன வன்முறை மோதலில் இருவர் உயிரிழந்தனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதனால் தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்ததால் நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த மோதல்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்படுவதால், நாட்டின் முக்கிய பகுதிகளில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Chrystia Freeland இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் மோதலில் ஈடுபடுவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் பேச்சு வார்த்தையில் தீர்வு கண்டு இதற்கு ஒரு சுமூகமான முடிவை காண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்படுவதால், அதற்கு முடிவு கட்டும் வகையில் இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.