அடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தை

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நேற்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பத்தனை கிரேக்லி தோட்ட தொழிற்சாலையில் உதவி உத்தியோகத்தராக பணி புரியும் குறித்த குடும்பஸ்தர், தனது வீட்டுக்கும் பத்தனை பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.திருச்செல்வம் வயது 38 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணி வரை வீட்டுக்கு வராததால் உறவினர்கள் இவரை தேடிச் சென்றுள்ளனர். இதன்போதே இவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டபோதும், சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. குறித்த நபரின் உடலம், கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பின்னர் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவின் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like